கோபி அருகே கட்டையால் அடித்து தொழிலாளி கொலை: குடிபோதையில் தகராறு செய்ததால் உறவினர் ஆத்திரம்


கோபி அருகே கட்டையால் அடித்து தொழிலாளி கொலை: குடிபோதையில் தகராறு செய்ததால் உறவினர் ஆத்திரம்
x
தினத்தந்தி 15 April 2018 10:00 PM GMT (Updated: 2018-04-16T00:39:24+05:30)

கோபி அருகே குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த உறவினர், தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்தார்.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள காசிபாளையம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 40). அவருடைய மனைவி விஜயா (32). இவர்களுக்கு அசோக் (7) என்ற மகனும், காவிரி (16) என்ற மகளும் உள்ளார்கள். கருப்பசாமி மரம் அறுக்கும் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கமும் உண்டு.

அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதே பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (27). இவர் கருப்பசாமியின் உறவினர் ஆவார். இந்த நிலையில் கருப்பசாமி நேற்று மதியம் 12 மணி அளவில் மது குடித்துவிட்டு அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே கனகராஜ் நடந்து வந்துள்ளார். திடீரென அவரிடம் கருப்பசாமி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜ் அங்கு கிடந்த கட்டையை எடுத்து கருப்பசாமியின் தலையில் சரமாரியாக அடித்தார். இதில் வலி தாங்க முடியாமல் அவர் “அய்யோ, அம்மா” என்று அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கொலை நடந்ததும் கனகராஜ் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதற்கிடையே சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே இதுகுறித்து கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கருப்புசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற கனகராஜை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story