திருநங்கைகள் படிப்பதற்கு தனி பள்ளி, கல்லூரி ஏற்படுத்த வேண்டும் அரசுக்கு கோரிக்கை


திருநங்கைகள் படிப்பதற்கு தனி பள்ளி, கல்லூரி ஏற்படுத்த வேண்டும் அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 16 April 2018 4:30 AM IST (Updated: 16 April 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

திருநங்கைகள் படிப்பதற்கு தனி பள்ளி, கல்லூரி ஏற்படுத்த வேண்டும் என வேலூரில் நடந்த தென்னிந்திய மாநாட்டில் கலந்து கொள்ள வந்த திருநங்கைகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

வேலூர்,

தென்னிந்திய திருநங்கைகள் முதல் மாநாடு வேலூர் அண்ணா கலையரங்கில் நேற்று நடந்தது. இதனையொட்டி திருநங்கைகளுக்கு நடன, நாடக போட்டி, மிஸ் தென்னிந்திய திருநங்கை போட்டி உள்பட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல் ஏராளமான திருநங்கைகள் வேலூருக்கு வரத்தொடங்கினர்.

நேற்று காலை நடன, நாடக ஒத்திகையில் திருநங்கைகள் ஈடுபட்டிருந்தனர்.

மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

சேலத்தை சேர்ந்த ரம்யா கூறுகையில், ‘பல திருநங்கைகளுக்கு படிப்பில் ஆர்வம் உள்ளது. ஆனால் இங்கு படித்த திருநங்கைகளுக்கு வேலை கிடைக்காத நிலை காணப்படுகிறது. படித்த திருநங்கைகளுக்கு வேலை கொடுக்க யாரும் முன்வருவது இல்லை. பல்வேறு காரணங்களால் படிப்பை பாதியில் நிறுத்திய திருநங்கைகள், தொடர்ந்து படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அதற்கான சூழ்நிலைகள் இல்லை. எனவே தமிழ்நாட்டில் திருநங்கைகள் படிக்க தனி பள்ளி, கல்லூரிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அரசு இதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும் படிப்புக்கேற்ற வேலை வழங்க வேண்டும்’ என்றார்.

பெங்களூருவை சேர்ந்த ஷில்பா கூறுகையில், ‘நான் சினிமாவில் சிறு, சிறு வேடங்களில் நடித்து வருகிறேன். அப்பா, தூங்காவனம் உள்பட தமிழில் இதுவரை 12 படங்களில் நடித்துள்ளேன். தற்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். கடந்தாண்டு ‘மிஸ் பாண்டிச்சேரி’ பட்டம் பெற்றேன். தர்மதுரை, காஞ்சனா போன்ற படங்களில் திருநங்கைகளை நல்ல விதமாக காண்பித்தனர். ஐ உள்பட சில படங்களில் திருநங்கைகளை இழிவுபடுத்துவது போன்று காட்சி படுத்தியது எங்களை புண்படுத்தியது. தற்போது தமிழ் சினிமாவில் திருநங்கைகளுக்கு நடிக்க வாய்ப்பு கொடுக்கிறார்கள். சினிமா உள்பட அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். எங்களை இழிவுபடுத்த கூடாது. மற்றவர்களை போன்று அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை, இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’ என்றார்.

தென்னிந்திய திருநங்கைகள் மாநாடு ஒருங்கிணைப்பாளர் சுதா கூறுகையில், ‘திருநங்கைகளுக்கு மிஸ் போட்டி நடத்துவது குறித்து பலர் பலவிதமாக கூறுகிறார்கள். அழகு மட்டும் அல்லாமல் அறிவு மற்றும் உடலை எப்படி பராமரிப்பது என்று தெரிந்து கொள்வதற்காக தான் மிஸ் திருநங்கைகள் போட்டி நடத்தப்படுகிறது. தென்னிந்திய அளவில் திருநங்கைகளுக்கு வேலூரில் தான் முதன் முதலாக மாநாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள திருநங்கைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்வான 20 முதல் 30 திருநங்கைகள் மட்டுமே மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்துள்ளது. திருநங்கைகளுக்கென்று நலவாரியம் அமைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 213 திருநங்கைகளுக்கு வீடுகட்டி தந்தது போன்றவை குறிப்பிடத்தக்கது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் திருநங்கைகளுக்கு மதிப்பும், மரியாதையும் அதிகமாகவே உள்ளது. எங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக அமைச்சர்களிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்’ என்றார்.

கேலி, கிண்டல் செய்வதை தவிர்க்க...

புதுச்சேரியை சேர்ந்த சரிகா கூறுகையில், ‘நான் நடன, நாடக கலைஞராக உள்ளேன். கலைத்துறையில் திருநங்கைகளுக்கு அதிகளவு வாய்ப்பு வழங்க வேண்டும். அதேபோன்று இசைப்பள்ளி உள்பட கலை தொடர்பான பள்ளிகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கேலி, கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.


Next Story