உளுந்தூர்பேட்டை பகுதியில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி


உளுந்தூர்பேட்டை பகுதியில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 16 April 2018 3:15 AM IST (Updated: 16 April 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகல் நேரத்தில் கையில் குடை பிடித்துக்கொண்டோ அல்லது தலையில் துணியால் போர்த்திக்கொண்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. வெயிலுக்கு அஞ்சி பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இதன் காரணமாக சாலையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

வெயிலின் தாக்கத்தை தணிக்க கரும்புசாறு, பழச்சாறு, பதனீர், நீர்,மோர் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி ஆகியவற்றை பொதுமக்கள் சாப்பிட்டும் வந்தனர். மழை பெய்து பூமியை குளிர்வித்தால்தான் வெப்பத்தின் தாக்கம் தணியும் என்ற நிலையில் உளுந்தூர்பேட்டை பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

உளுந்தூர்பேட்டையில் நேற்று காலை 8 மணி முதலே வெயிலின் தாக்கம் தொடங்கியது. 10 மணிக்கு வெயிலின் தாக்கம் சற்று தணிந்து, குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் 10.30 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. இந்த மழை பகல் 1 மணி வரை நீடித்தது. அதன் பின்னர் மழை தூறிக் கொண்டே இருந்தது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம் போல் தேங்கியது. திடீரென பெய்த மழையால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது.

இதேபோல் செங்குறிச்சி, நகர், பாதூர், ஆசனூர், எலவனாசூர்கோட்டை, சேந்தநாடு, களமருதூர், வெள்ளையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து இதமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Next Story