அடுத்தகட்ட போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை


அடுத்தகட்ட போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார் கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை
x
தினத்தந்தி 15 April 2018 8:30 PM GMT (Updated: 2018-04-16T01:54:32+05:30)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.

சென்னை, 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். அதற்காக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.

வலுப்பெறும் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை 6 மாத காலத்திற்குள் அமைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு கடந்த மாதம் (மார்ச்) 29-ந்தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தின.

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையே, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டங்கள் வலுப்பெற தொடங்கின. ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் மத்திய அரசை கண்டித்து கடந்த 3-ந்தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

கடந்த 5-ந்தேதி முழு அடைப்பு போராட்டத்தை தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகள் நடத்தின. அதைத் தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களை மையப்படுத்தி காவிரி உரிமைப் மீட்பு பயணத்தை திருச்சியில் இருந்து மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.

கவர்னருடன் சந்திப்பு

இதற்கிடையே, சென்னையில் கடந்த 10-ந்தேதி நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிக்கு எதிராக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட வந்த பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு நடைபெற இருந்த ஏனைய 6 போட்டிகளும் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.

கடந்த 12-ந்தேதி ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி காட்டப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 13-ந்தேதி மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து மனு அளித்தார். பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், “பிரதமரை சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக கவர்னர் உறுதியளித்துள்ளார்” என்று தெரிவித்தார்.

அனைத்து கட்சி கூட்டம்

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுப்பதாக, தி.மு.க. சார்பில் இன்று(திங்கட்கிழமை) அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இதில், அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்பட்டு, அதை மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்.

முன்னதாக, இன்று(திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்குவதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Next Story