வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்


வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 April 2018 4:15 AM IST (Updated: 16 April 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

விக்கிரமசிங்கபுரத்தில் வாலிபரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரமசிங்கபுரம்,

விக்கிரமசிங்கபுரம் சிதம்பரவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் மகன் ராஜா (வயது 26). நேற்று முன்தினம் ராஜா மதுவில் விஷம் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராஜாவை அவருடைய நண்பரான ஜோதிராஜன் (28) என்பவர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிறிது நேரத்தில் ராஜா பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ராஜாவின் தாய் மேரிமிக்கேல் விக்கிரமசிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்படி ஜோதிராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று ராஜாவின் உடல் விக்கிரமசிங்கபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது, ராஜாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் விக்கிரமசிங்கபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story