ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவது பற்றி இன்று முடிவு செய்யப்படும் - கவர்னர் கிரண்பெடி தகவல்


ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்குவது பற்றி இன்று முடிவு செய்யப்படும் - கவர்னர் கிரண்பெடி தகவல்
x
தினத்தந்தி 16 April 2018 4:45 AM IST (Updated: 16 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

ரேஷன் கடைகளில் இலவச அரிசிக்கு பதில் பணம் வழங்கப்படுவது பற்றி இன்று (திங்கட் கிழமை) முடிவு செய்யப்படும் என்று கவர்னர் கிரண்பெடி கூறினார்.

பாகூர்,

கவர்னர் கிரண்பெடி வார விடுமுறை நாட்களில் புதுவையில் இருக்கும்போது கிராமப்புறங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி கடந்த மாதம் 25-ந் தேதி கிருமாம்பாக்கம் ஏரியை கவர்னர் ஆய்வு செய்தார். அப்போது கிராமப்புறங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் கிருமாம்பாக்கம் ஏரியில் படகு குழாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் படகு குழாம் அமைக்கும் பணி நடைபெற்றது. நேற்று கிருமாம்பாக்கம் ஏரியில் படகு குழாம் திறப்பு விழா நடந்தது. விழாவில் கவர்னர் கிரண்பெடி, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு படகு குழாமை திறந்து வைத்தனர். பின்னர் இருவரும் படகில் சவாரி செய்தனர்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் கவர்னர் கிரண்பெடி பேசியதாவது;-

இந்த ஏரியில் படகு குழாம் அமைவதற்கு முக்கிய காரணம் அமைச்சர் கந்தசாமி தான். அவர்தான் என்னை ஆய்வுக்கு அழைத்து வந்து இந்த ஏரியில் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தலாம். இதன் மூலம் கிராமப்புறமான இப்பகுதி வளர்ச்சி அடையும். இதற்கு, பொது மக்களாகி நீங்கள், அமைச்சர் கந்தசாமிக்கு தான் நன்றி கூற வேண்டும்.

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு நபார்டு மூலம் தொழில் பயிற்சி அளித்து, முத்ரா திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்று படகு குழாம் பகுதியில் சிறு தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மாதம் இந்த படகு குழாமுக்கு மீண்டும் ஆய்வு செய்ய வருவேன். அதற்குள் தேவையான வசதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்தவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அப்போது, பொது மக்கள் சிலர் ஏற்கனவே அரசு துறையில் 4 ஆண்டுகள் பணியாற்றி, தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் களுக்கு, படகு குழாமில் வேலை வாய்ப்பு அளித்திட வேண்டும், ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கிட வேண்டும், படகு குழாம் பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு கவர்னர் கிரண்பெடி, இலவச அரிசி வேண்டுமா? அல்லது அதற்கான பணம் வேண்டுமா? என்று பொதுமக்களிடம் கேட்டார். அரிசிக்கு பதில் பணமாக வழங்கினால், அந்த பணத்தின் மூலம் 10 கிலோ தான் அரிசி வாங்க முடியும். நீங்கள் அரிசியாக வழங்கினால், எங்களுக்கு 20 கிலோ கிடைக்கும் என்று பொதுமக்கள் கூறினர். இது தொடர்பாக நாளை (அதாவது இன்று) முடிவு செய்யப்படும் என்று கவர்னர் தெரிவித்தார்.

விழாவில் தெற்கு மாவட்ட துணை கலெக்டர் உதய குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தரராஜன் மற்றும் வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

Next Story