யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக பேசிய தினேஷ் குண்டுராவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டம்


யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக பேசிய தினேஷ் குண்டுராவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2018 10:30 PM GMT (Updated: 2018-04-16T03:37:09+05:30)

உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக பேசிய தினேஷ் குண்டுராவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு, 

உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக பேசிய தினேஷ் குண்டுராவுக்கு எதிராக பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர் மீது தலைமை தேர்தல் அதிகாரியிடமும் பா.ஜனதாவினர் புகார் கொடுத்துள்ளனர்.

தினேஷ் குண்டுராவுக்கு கண்டனம்

கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவராக இருந்து வருபவர் தினேஷ் குண்டுராவ். இவர், நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக பேசி இருந்தார். இந்த நிலையில், யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக பேசிய தினேஷ் குண்டுராவுக்கு கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை தினேஷ் குண்டுராவ் தரக்குறைவாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். தினேஷ் குண்டுராவ் குடிபோதையில் பேசினாரா? என்பது தெரியவில்லை,“ என்றார். அதுபோல, பா.ஜனதாவை சேர்ந்த பிரதாப் சிம்ஹா எம்.பி. தனது ‘டுவிட்டர்‘, முகநூல் பக்கத்தில் தினேஷ் குண்டுராவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

தேர்தல் அதிகாரியிடம் புகார்

இந்த நிலையில், கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமாரை நேற்று பா.ஜனதாவை சேர்ந்த ஷோபா எம்.பி. சந்தித்து காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவுக்கு எதிராக புகார் கொடுத்தார். அந்த புகாரில், “கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடக்க உள்ள நிலையில் காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ் பா.ஜனதா கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். மேலும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக அவர் பேசியுள்ளார்.

மக்களை திசை திருப்பும் நோக்கத்துடன் இதுபோன்று தினேஷ் குண்டுராவ் பேசியுள்ளார். எனவே தினேஷ் குண்டுராவ் மீது தேர்தல் விதி முறையை மீறியதாக கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

போராட்டம்

இதற்கிடையே, பெங்களூரு அனந்தராவ் சர்க்கிளில் தினேஷ் குண்டுராவுக்கு எதிராக பா.ஜனதா கட்சியினர் நேற்று காலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், எம்.பி.க்கள் ஷோபா, பி.சி.மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக பேசிய தினேஷ் குண்டுராவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தினேஷ் குண்டுராவுக்கு எதிராகவும் பா.ஜனதாவினர் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த போராட்டத்தின் போது ஷோபா எம்.பி. பேசியதாவது:-

சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் தங்களது வாய்க்கு வந்ததை பேசு கிறார்கள். அதுபோல தான் தினேஷ் குண்டுராவும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக பேசி இருக்கிறார். இது கண்டிக்கத்தக்கது. இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு முன்பாக கூட பிரதமரையும் அவர் தரக்குறைவாக பேசி இருந்தார். யோகி ஆதித்யநாத்தை தரக்குறைவாக பேசிய தினேஷ் குண்டுராவை காங்கிரசில் இருந்து ராகுல்காந்தி உடனடியாக நீக்க வேண்டும்

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story