மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளி சைமன் சாவு உடல் நலக்குறைவால் பெங்களூரு ஆஸ்பத்திரியில் உயிர் பிரிந்தது

கண்ணிவெடி வைத்து போலீஸ்காரர்கள் உள்பட 22 பேரை கொன்ற வழக்கில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளி சைமன் நேற்று இறந்தார்.
பெங்களூரு,
கண்ணிவெடி வைத்து போலீஸ்காரர்கள் உள்பட 22 பேரை கொன்ற வழக்கில் கைதாகி மரண தண்டனை விதிக்கப்பட்ட வீரப்பன் கூட்டாளி சைமன் நேற்று இறந்தார். உடல் நலக்குறைவால் பெங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவருடைய உயிர் பிரிந்தது.
கண்ணிவெடி வைத்து 22 பேர் கொலை
சந்தன கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக இருந்தவர் சைமன். கடந்த 1993-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந் தேதி வீரப்பனை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரியும், சிறப்பு அதிரடிப்படை தலைவருமான கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் 2 வாகனங்களில் தமிழ்நாடு மேட்டூர் அருகே உள்ள கோவிந்தபாடி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்த சிறப்பு அதிரடிப்படையில் தமிழகம், கர்நாடகம் மாநிலங்களை சேர்ந்த போலீஸ்காரர்கள் மற்றும் வனத்துறையினர் இருந்தனர். பாலாறு அருகே சுரகாமடுவு பகுதியில் வாகனங்கள் சென்றபோது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடித்தன. இதில், சிறப்பு அதிரடிப்படையில் இருந்த போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள், வனத்துறையினர் என்று மொத்தம் 22 பேர் இறந்தனர். மேலும் 13 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மரண தண்டனை
இந்த வழக்கில் தொடர்புடைய சைமன் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டு மைசூரு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மைசூரு ‘தடா‘ கோர்ட்டு சைமன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சைமன் உள்பட 4 பேர் தங்களுக்கான ஆயுள் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தனர்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, சைமன் உள்பட 4 பேருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி அவர்கள் ஜனாதிபதிக்கு மனுக்கள் செய்தனர். ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை.
சாவு
சிறையில் இருந்த சைமன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். சிறுநீரக கோளாறும் அவருக்கு இருந்தது. இதனால் மைசூரு மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் சைமன் பரிதாபமாக இறந்தார். அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
சொந்த கிராமம்
இறந்துபோன சைமன், கடந்த 1993-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். சாம்ராஜ்நகர் மாவட்டம் ஒட்டர்தொட்டி தான் வீரப்பன் கூட்டாளியான சைமனின் சொந்த கிராமம் ஆகும். இவருக்கு வயது 60 ஆகும். வீரப்பன் சரண் அடைய இருப்பதாக சிறப்பு அதிரடி படையினருக்கு சைமன் தகவல் கொடுத்ததாகவும், இதையடுத்து அவர்கள் தமிழகத்துக்கு புறப்பட்டபோது கண்ணிவெடி வெடித்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story