பல்லாரி மத்திய சிறையில் திடீர் சோதனை கைதிகளிடம் செல்போன்கள், டி.வி.க்கள், கஞ்சா பறிமுதல்


பல்லாரி மத்திய சிறையில் திடீர் சோதனை கைதிகளிடம் செல்போன்கள், டி.வி.க்கள், கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 16 April 2018 4:15 AM IST (Updated: 16 April 2018 3:46 AM IST)
t-max-icont-min-icon

பல்லாரி மத்திய சிறையில் போலீஸ் சூப்பிரண்டு நடத்திய திடீர் சோதனையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள், எல்.இ.டி. டி.வி.க்கள், கஞ்சாக்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரு, 

பல்லாரி மத்திய சிறையில் போலீஸ் சூப்பிரண்டு நடத்திய திடீர் சோதனையில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள், எல்.இ.டி. டி.வி.க்கள், கஞ்சாக்கள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு

சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடு நடப்பதாக புகார்கள் எழுந்தன. அத்துடன், ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்டு சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா, சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருந்த சத்திய நாராயணராவ் மீது குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்றது. தற்போது ஊழல் தடுப்பு படையினர் டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக சத்திய நாராயணராவ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது என்று கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

பறிமுதல்

இந்த நிலையில், பல்லாரி மத்திய சிறையில் கைதிகள் செல்போன்கள், கஞ்சாக்கள் பயன்படுத்துவதாக பல்லாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் ரங்கராஜனுக்கு புகார்கள் சென்றன. இந்த புகார்களின் பேரில் நேற்று காலையில் போலீஸ் சூப்பிரண்டு அருண் ரங்கராஜன் தலைமையிலான போலீசார் சிறைக்கு சென்று தீவிர சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது சிறையில் உள்ள கைதிகள் அறைகளில் எல்.இ.டி. டி.வி.க்கள் இருப்பது தெரியவந்தது. செல்போன்கள், கஞ்சாக்கள் ஆகியவற்றையும் கைதிகள் சாதாரணமாக பயன்படுத்தினார்கள்.

இதை கண்டு போலீசார் மிரண்டு போனார்கள். இதையடுத்து கைதிகளின் அறைகளில் இருந்த 3 எல்.இ.டி. டி.வி.க்கள், ‘ஏர்கூலர்’, 14 செல்போன்கள், செல்போன் சார்ஜர்கள், கஞ்சாக்கள், சிகரெட்-பீடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் யார்?, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்த விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு அருண் ரங்கராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Next Story