கடலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க அமைத்திருந்த இரும்பு கேட் உடைப்பு


கடலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க அமைத்திருந்த இரும்பு கேட் உடைப்பு
x
தினத்தந்தி 17 April 2018 3:30 AM IST (Updated: 16 April 2018 11:45 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே மணல் கொள்ளையை தடுக்க அமைத்திருந்த இரும்பு கேட் உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம், 

கடலூர் அருகே கிளிஞ்சிக்குப்பம் கிராமத்தில் கிளிஞ்சல் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக்கொண்டு, சுடுகாட்டு பாதை வழியாக கடத்தப்பட்டு வந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு, மணல் கடத்தலை தடுப்பதற்காக சுடுகாட்டு பாதையின் குறுக்கே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டினார். ஆனால் மறுநாளே அந்த பள்ளம் மூடப்பட்டு, அந்த வழியாக மாட்டுவண்டிகளில் மணல் கடத்தப்பட்டது.

எனவே மணல் கடத்தலை தடுக்கவும், நிரந்தர தீர்வு ஏற்படுத்தவும் சுடுகாட்டு பாதையை அடைக்க இரும்பு கேட் அமைக்க கிராம நிர்வாக அலுவலர் முடிவு செய்தார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுடுகாட்டு பாதையின் குறுக்கே இரும்பு கேட் அமைத்தார்.

இந்த நிலையில் அந்த இரும்பு கேட்டில் உள்ள கம்பிகளை மர்மநபர்கள் உடைத்துள்ளனர். மேலும் சிலர் கிளிஞ்சல் ஆற்றில் இருந்து சாக்குகளில் மணல் அடைத்து, அதனை உடைக்கப்பட்ட இரும்பு கேட் வழியாக மறுபுறம் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கிராம நிர்வாக அலுவலர் பிரதாப் நேரில் சென்று பார்த்தார். மேலும் இது பற்றி அவர் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் கிளிஞ்சல் கிராமத்துக்கு சென்று, மணல் கடத்தலை தடுப்பதற்காக வருவாய்த்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு கேட்டை உடைத்தது யார்? என்று விசாரணை நடத்தினர்.

அந்த சமயத்தில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர், சுடுகாட்டுப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கேட்டை அகற்ற வேண்டும் என்று கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு போலீசார், அரசுக்கு சொந்தமான இடத்தில் வருவாய்த்துறையினர் கேட் அமைத்துள்ளனர். அதுவும் மணல் கடத்தலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட இரும்பு கேட்டை அகற்ற முடியாது என்று கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story