தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை


தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 17 April 2018 3:30 AM IST (Updated: 17 April 2018 12:01 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி நகராட்சி அலுவலகத்தை காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருத்தாசலம், 

விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் திருவள்ளுவர் நகர் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக குடிநீர் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நகராட்சி அதிகாரிகளை சந்தித்து, குடிநீர் குழாய்கள் உடைப்பை சரி செய்து தடையின்றி தங்களது பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் திருவள்ளுவர் நகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்த பெண்கள் சிலர் நேற்று காலி குடங்களுடன் அருகில் உள்ள பொதுக்குழாய்க்கு குடிநீர் எடுக்க சென்றனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் குடிநீர் எடுத்து செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த திருவள்ளுவர் நகர் 12-வது தெருவை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி கண்டன கோஷங்கள் எழுப்பியபடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த நகராட்சி ஆணையர் பாலு, இன்னும் ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நகராட்சி அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story