காவிரிக்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்யக்கோரி மாடுகளுடன் மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு


காவிரிக்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்யக்கோரி மாடுகளுடன் மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

காவிரிக்காக போராடிய மாணவர்களை விடுதலை செய்யக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு ஆடு, மாடுகளுடன் மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது சோமரசம் பேட்டையில் இருந்து சமூக நீதிப்பேரவை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அதன் மாவட்ட செயலாளர் ரவிக்குமார் தலைமையில் 2 மாடுகள் மற்றும் ஒரு ஆடு ஆகியவற்றுடன் வந்தனர். அந்த மாடுகள் மற்றும் ஆட்டின் கழுத்தில் தண்ணீரின்றி தவிக்கும் எங்களை வாழ விடுங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகள் தொங்கவிடப்பட்டு இருந்தன. கலெக்டர் அலுவலக வாசலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

திருச்சி மாவட்டம் பாவப்பட்ட பூமியாக மாறிவிட்டது. காவிரி ஆற்றில் இருக்கின்ற மணலை எல்லாம் அள்ளி நிலத்தடி நீர் வற்றியதால் கால்நடைகள் கூட வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் காவிரிக்காக போராடிய மாணவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி கால்நடைகளுடன் மனு கொடுக்க வந்து உள்ளோம். எனவே இந்த மனுக்களை கலெக்டரிடம் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் போலீசாரிடம் கேட்டனர். ஆனால் போலீசார் கால்நடைகள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. அவற்றை இங்கேயே நிறுத்திவிட்டு நீங்கள் மட்டும் உள்ளே செல்லலாம் என்றார்கள். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கால்நடைகளை வெளியே நிற்க வைத்து விட்டு சமூக நீதி பேரவையை சேர்ந்தவர்கள் மட்டும் மனு கொடுப்பதற்காக உள்ளே சென்றனர். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலக வாசலில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story