செந்துறை அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தலை தடுத்த 2 வாலிபர்கள் கடத்தல்


செந்துறை அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தலை தடுத்த 2 வாலிபர்கள் கடத்தல்
x
தினத்தந்தி 16 April 2018 11:00 PM GMT (Updated: 16 April 2018 6:48 PM GMT)

செந்துறை அருகே வெள்ளாற்றில் மணல் கடத்தலை தடுத்த 2 வாலிபர்கள் கடத்தப்பட்டனர். இது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மோட்டார் சைக்கிள் உடைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சன்னாசிநல்லூர் முதல் கோட்டைக்காடு வரையிலான வெள்ளாற்றில் தினமும் நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கடத்தப்பட்டு வந்தன. சிலர் குழுவாக சேர்ந்து ஓரிடத்தில் மணலை சேகரித்து வைத்து, பின்னர் அவற்றை லாரிகளில் வெளிமாவட்டங்களுக்கு கடத்தி வந்தனர்.

மேலும் இரவு நேரங்களில் பலர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் அள்ளி வந்தனர். இவர்கள் மீது அவ்வப்போது தளவாய் மற்றும் குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இருப்பினும் மணல் கடத்தல் தொடர்ந்து வந்தது. மணல் கடத்தலை முழுமையாக தடுத்து நிறுத்த கோரி, கடலூர் மாவட்டம் செம்பேரி வெள்ளாற்று பாதுகாப்பு சங்கத்தினர் அதன் தலைவர் தனவேல் தலைமையில், மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் மனுக்கள் கொடுத்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களும் நடத்தினர். இருப்பினும் மணல் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் வெள்ளாற்று பாதுகாப்பு சங்கத்தினர் நேரடியாக ஆற்றில் இறங்கி மணல் லாரிகளை சிறைபிடித்தும், பொக்லைன் எந்திரங்களை உடைத்தும் அதிரடி போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கும், மணல் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை செந்துறை அருகே சிலர் வெள்ளாற்றில் பொக்லைன் எந்திரங்களை கொண்டு மணல் அள்ளிகொண்டு இருப்பதை செம்பேரி இளைஞர்கள், விவசாயிகள் பார்த்தனர். இதனை தட்டிக்கேட்ட விவசாயிகளுக்கும், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே நடு ஆற்றில் தகராறு ஏற்பட்டது. அப்போது இருதரப்பினரும் கல்வீசி தாக்கி கொண்டனர்.

இதற்கிடையில் அரியலூர் மாவட்டம் தெத்தேரி கிராமத்தை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் பக்கிரிசாமி மகன் வேல்முருகன் (வயது 31) மற்றும் செல்வராசு மகன் வேலுமணி (30) ஆகிய 2 பேரை செம்பேரி இளைஞர்கள் பிடித்து சென்றனர். அதேநேரத்தில் மணல் கடத்தலை தடுத்த கடலூர் மாவட்டம் செம்பேரி கிராமத்தை சேர்ந்த தங்கராசு மகன் பாலாஜி (24) மற்றும் கோவிந்தசாமி மகன் மணிகண்டன் (25) ஆகிய 2 பேரையும் மணல் கடத்தல்காரர்கள் முள்ளுக்குறிச்சி முந்திரிகாட்டிற்கு கடத்தி சென்று, அங்கே அவர்களை தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த வெள்ளாற்று பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் செம்பேரி கிராம மக்கள் உருட்டு கட்டைகளுடன் அரியலூர் மாவட்ட எல்லையில் உள்ள ஆதனங்குறிச்சி கிராமத்திற்குள் நுழைந்தனர். தகவல் அறிந்த தளவாய் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், செம்பேரி இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கே நின்ற பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த திருமுருகனின் மோட்டார் சைக்கிளை கடலூர் மாவட்ட இளைஞர்கள் அடித்து உடைத்தனர். இந்த மோதல் குறித்து தகவல் அறிந்ததும் அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், கடலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தீபா சந்தியன், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததன் பேரில் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

இந்தநிலையில் கடத்தப்பட்ட செம்பேரி இளைஞர்கள் 2 பேரையும் கடலூர் மாவட்ட போலீசார் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதேபோல் செம்பேரி மக்களால் பிடித்து செல்லப்பட்ட தெத்தேரி கிராமத்தை சேர்ந்த பொக்லைன் ஆபரேட்டர் வேல்முருகன், வேலுமணி ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த வேல்முருகன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் மீண்டும் இரண்டு மாவட்ட மக்களுக்கும் இடையே மோதல் ஏற்படாத வகையில், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், குவாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாக்குலின் உள்ளிட்ட ஏராளமான போலீசார் அரியலூர் மாவட்ட எல்லையிலும், பெண்ணாடம் போலீசார் கடலூர் மாவட்ட எல்லையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாவட்ட மக்கள் இடையே ஏற்பட்ட இந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story