கடமலைக்குண்டு அருகே தண்ணீர் தேடிவந்த கடமான் கிணற்றுக்குள் விழுந்தது
கடமலைக்குண்டு அருகே தண்ணீர் தேடி வந்து கிணற்றுக்குள் விழுந்த கடமானை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர்.
கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே டாணாதோட்டம் மலைப்பகுதியில் கடமான்கள் அதிக அளவில் உள்ளன. கடந்த சில மாதங்களாக இந்த மலைப்பகுதியில் போதிய மழை இல்லை. எனவே மலைப்பகுதியில் உள்ள குளம் உள்ளிட்டவற்றில் தண்ணீர் வற்றி விட்டது. இதனால் கடமான்கள் இரவு நேரங்களில் குடிநீரை தேடி அருகில் உள்ள தோட்டப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளன.
நேற்று காலை 6 மணியளவில் தண்ணீர் தேடி டாணாதோட்டம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு சென்ற பெண் கடமான் அருகில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை கண்ட விவசாயிகள் உடனடியாக கண்டமனூர் வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் குமரேசன் உத்தரவின் பேரில் வனவர் சோனைமுத்து உள்ளிட்ட வனத்துறையினர் டாணாதோட்டம் பகுதிக்கு சென்று கிணற்றில் விழுந்த கடமானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் கிணறு மிகவும் ஆழமாக இருந்ததால் கடமானை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து கடமலைக்குண்டு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் டாணாதோட்டம் பகுதிக்கு வந்த வீரர்கள் வனத்துறையினருடன் சேர்ந்து கடமானை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு கிணற்றில் விழுந்த கடமானின் உடலில் கயிறை கட்டி மேலே தூக்கி வந்தனர்.
பின்னர் மீட்கப்பட்ட கடமானுக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அருகில் இருந்த மலைப்பகுதியில் கொண்டு விட்டனர். மலைப்பகுதிக்குள் கடமான் ஓடி சென்று மறைந்தது. மழை இல்லாத நேரங்களில் டாணாதோட்டம் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வரும் கடமான்கள் கிணற்றுக்குள் விழுவதும், சாலையை கடக்கும் போது வாகனங்களில் அடிபட்டு இறப்பதும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எனவே இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மலைப்பகுதியில் மான்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story