ஈரோட்டில் உஜ்ஜீவன் சிறுநிதி வங்கியின் கிளை திறப்பு


ஈரோட்டில் உஜ்ஜீவன் சிறுநிதி வங்கியின் கிளை திறப்பு
x
தினத்தந்தி 17 April 2018 3:45 AM IST (Updated: 17 April 2018 1:12 AM IST)
t-max-icont-min-icon

உஜ்ஜீவன் சிறுநிதி வங்கியின் புதிய கிளை ஈரோட்டில் திறக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

உஜ்ஜீவன் நிதி நிறுவனத்தின் துணை நிறுவனமான உஜ்ஜீவன் சிறுநிதி வங்கியின் புதிய கிளை ஈரோடு சத்திரோடு கலைவாணர் வீதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் லோட்டஸ் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் சகாதேவன் ரிப்பன் வெட்டி வங்கியை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.

உஜ்ஜீவன் சிறுநிதி வங்கி கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வங்கி செயல்பட்டு வருகிறது. 2009-ம் ஆண்டு முதல் ஈரோட்டில் செயல்பட்டு வரும் உஜ்ஜீவன் நிறுவனம் 9 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு உதவி செய்து வருகிறது.

இந்த வாடிக்கையாளர்கள் சிறுநிதி வங்கியின் வாடிக்கையாளர்களாக விரைவில் மாற்றப்படுவார்கள். தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் 63 கிளைகள் உள்ளன. இதில் 5 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஒரு வங்கியைப்போல் சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, வைப்புத்தொகை திட்டங்கள், வீட்டுவசதி கடன்கள் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்கும் வகையில் விரைவில் நாடு முழுவதும் கிளைகள் உருவாக்கப்படும்.

எங்களது வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு எந்தவொரு இருப்புத்தொகையும் பராமரிக்க தேவையில்லை. எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது. மேலும், ஆதார் வசதியுடைய கே.ஒய்.சி., பயோமெட்ரிக் அடையாள சரிபார்ப்பை பயன்படுத்தி எந்தவொரு அடையாள நகல் இல்லாமலும் 10 நிமிடங்களில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஆன்லைன் வங்கி சேவை, மொபைல் வங்கி சேவை, குறுந்தகவல், மிஸ்டு கால் சேவை போன்ற பல்வேறு சிறப்பு சேவைகள் வழங்கப்படுகிறது.

ரூபே டெபிட் கார்டு, பயோமெட்ரிக் உதவியுடன் இயங்கும் ஏ.டி.எம். ஆகிய வசதிகள் உள்ளன. ஏ.டி.எம். மையங்களில் வரம்புகளின்றி பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். வலையமைப்பில் இலவசமாக மொத்தம் 7 பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதன் மூலம் கட்டணமில்லா பரிவர்த்தனை அளிக்கும் வங்கிகளில் உஜ்ஜீவன் தனிச்சிறப்பை பெற்று உள்ளது.

ரூ.1 கோடிக்கு குறைவான நிரந்தர வைப்பு தொகைக்கு 1 அல்லது 2 ஆண்டுகளுக்கு 8 சதவீதம் என்ற வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கு 8.5 சதவீதம் வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வீடு கட்டுதல், வீடு வாங்குவது, புதுப்பிப்பது, சொத்தின் பேரில் கடன் பெறுவது போன்ற பல வகை கடன்களையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story