நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு


நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 17 April 2018 4:00 AM IST (Updated: 17 April 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார்.

மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். அந்த வகையில், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குண்டடம் வட்டாரம், நந்தவனம் பாளையம் கிராமம் தும்பலப்பட்டி ஊர் பகுதியில் காற்றாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பல நீர்நிலைகள் மற்றும், நீர் நிலைக்கு வருகிற ஓடைகள் அதிக அளவு ஆக்கிரமிக்கப்பட்டு, மின் கம்பங்கள் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பயன்படுத்தி கொண்டிருக்கின்ற நீர் நிலைகள் மற்றும் நீர் ஓடைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக மின்கம்பங்கள் மற்றும் போக்குவரத்து சாலைகள் அமைப்பதை தடுத்து நீர் நிலைகளை காப்பாற்ற வேண்டும். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றி அவைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடுமலை செல்லப்பம்பாளையம் ஊராட்சி சின்னப்புதூர் பகுதியில் உள்ள 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 30 பெண்கள் செல்லப்பம்பாளையம் ஊராட்சி சின்னப்புத்தூர் பகுதிக்குட்பட்ட பகுதியில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், ஊராட்சியில் செயலாளராக பணிபுரியும் ராஜேந்திரன் என்பவர் எங்களை பணியில் சேர்க்காமல் காலதாமதம் செய்து வருகிறார். இதுகுறித்து கேட்டால், “தொடர்ந்து பணிக்கு அமர்த்த வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் பணிக்கு வரவேண்டாம்” என்றும் மிரட்டுகிறார். 100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நபருக்கு 100 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும். ஆனால் சிலருக்கு மட்டும் தொடர்ந்து வேலை கொடுத்து வருகிறார். எனவே அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மாவட்டம் சங்ககிரி, இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவருக்கு சொந்தமாக பல்லடம் அனுப்பட்டி என்ற பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை சிவாஜி நகர் என்ற பெயரில் விற்பனை செய்வதாக கூறி திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏராளமானவர்களிடம் இருந்து தலா ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1½ லட்சம் வரை வாங்கி கொண்டு இதுவரை நிலமோ அல்லது கொடுத்த பணத்தையோ திரும்ப தராமல் இருந்து வருகிறார்.

மேலும், பல்வேறு காரணங்களை கூறி அடிக்கடி பணம் பெற்று வருகிறார். இதனால் அந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தையோ அல்லது நிலத்தையோ பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story