பார் கவுன்சில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டில் வழக்கு


பார் கவுன்சில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 17 April 2018 4:00 AM IST (Updated: 17 April 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

பார் கவுன்சில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு வக்கீல் எஸ்.எம்.ஆனந்தமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்தது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஜி.எம்.அக்பர்அலி, டி.மதிவாணன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக இருந்தனர். தமிழகம் முழுவதும் நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் தேர்தல் முடிந்ததும் சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை கடந்த 7-ந்தேதி முதல் தொடங்கும் என்றார்கள். பின்னர் 9-ந்தேதி முதல் நடக்கும் என்று அறிவித்தனர்.

இந்தநிலையில் தேர்தல் தீர்ப்பாயத்தின் அனுமதி கிடைத்த பிறகு தான் ஓட்டுகள் எண்ணப்படும் என்று இந்திய பார் கவுன்சில் செயலாளர் அறிவித்தார். பிற மாநில அலுவலர்களை வைத்து ஓட்டுகளை எண்ணுவதற்கு பார் கவுன்சில் முடிவு செய்துள்ளது. தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகளே ஓட்டு எண்ணிக்கையை முடித்து முடிவுகளையும் அறிவித்து இருக்க வேண்டும். அதை செய்யாமல் ஓட்டு எண்ணிக்கைக்காக பிற மாநில அதிகாரிகளை நியமனம் செய்வது சட்டவிரோதம்.

ஆனால் இதுவரை ஓட்டு எண்ணிக்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. பார் கவுன்சில் செயற்குழுவின் 5 ஆண்டு பதவி காலம் முடிந்தும் தொடர்கிறது. இவர்கள் ஓட்டு எண்ணிக்கையை தாமதப்படுத்தி பதவியில் தொடர திட்டமிட்டு செயல்படுகின்றனர். தேர்தல் நடந்து முடிந்தவுடன் ஓட்டுகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டியது தேர்தல் அலுவலர்களின் கடமையாகும். அவ்வாறு நடக்காவிட்டால் தேர்தல் நடைமுறையில் வக்கீல்களுக்கும், பொதுமக்களுக்கும் சந்தேகம் ஏற்படும்.

தேர்தல் அலுவலர்களாக செயல்பட்ட 2 ஓய்வுபெற்ற நீதிபதிகளும் அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளனர். இதனால் சுப்ரீம்கோர்ட்டு, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவை நியமனம் செய்து பார் கவுன்சில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம், ஜி.ஆர்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Next Story