கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 April 2018 10:00 PM GMT (Updated: 16 April 2018 8:57 PM GMT)

கடம்பத்தூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே திருவள்ளூர்-பேரம்பாக்கம் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் தினமும் பேரம்பாக்கம், சத்தரை, புதுமாவிலங்கை, மப்பேடு, கீழச்சேரி, சிற்றம்பாக்கம், களாம்பாக்கம் போன்ற சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்குள் செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதற்கு நிரந்தர தீர்வாக கடம்பத்தூரில் ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 2015-ம் ஆண்டு கடம்பத்தூரில் ரூ.14 கோடியே 50 லட்சத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நெடுஞ்சாலை துறை சார்பில் தண்டவாளத்தின் இருபுறமும் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் 25 தூண்களும், ரெயில்வே துறை சார்பில் தண்டவாளம் பகுதியில் 4 தூண்களும் என மொத்தம் 29 தூண்களுடன் 2 ஆண்டுகளில் மேம்பால பணியை முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி நெடுஞ்சாலை பகுதியில் 22 தூண்கள் மட்டும் அமைக்கப்பட்டு இருந்தது.

ஆனால் மேம்பால பணிக்காக நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் மீதமுள்ள தூண்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படாமல் கடந்த 1½ ஆண்டுகளாக ரெயில்வே மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

மேம்பால பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்கவேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள், ரெயில் பயணிகள் சங்கத்தினர் உள்பட பல்வேறு தரப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் தற்போது மீதம் உள்ள தூண்கள் அமைக்கும் பணியும், ரெயில்வே தண்டவாளத்தின் இருபுறமும் நெடுஞ்சாலை பகுதியில் அமைக்கப்பட்ட தூண்களில் பாலத்துக்கான தளம் அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் ரெயில்வே நிர்வாகம் சார்பில் தண்டவாளம் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணியும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு உள்ளது.

எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கவேண்டும் என வாகன ஓட்டிகள், அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story