ரவிக்குமாருக்கு டிக்கெட் கொடுக்காததால் மண்டியா காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய ஆதரவாளர்கள்


ரவிக்குமாருக்கு டிக்கெட் கொடுக்காததால் மண்டியா காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய ஆதரவாளர்கள்
x
தினத்தந்தி 17 April 2018 3:30 AM IST (Updated: 17 April 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

மண்டியா காங்கிரஸ் அலுவலகத்தை சூறையாடிய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மண்டியா,

மண்டியா தொகுதியில் ரவிக்குமாருக்கு டிக்கெட் கிடைக்காததால், அவருடைய ஆதரவாளர்கள் மண்டியா காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து நொறுக்கி சூறையாடினார்கள். மேலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 218 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில், மண்டியா காங்கிரஸ் பிரமுகர் ரவிக்குமார், மண்டியா தொகுதியில் தனக்கு டிக்கெட் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்தார். ஆனால், மண்டியா தொகுதியில் நடிகரும், முன்னாள் மந்திரியுமான அம்பரீஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், ரவிக்குமாரும், அவருடைய ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை, ரவிக்குமாரின் ஆதரவாளர்கள் மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், மண்டியா டவுனில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கும் போராட்டம் நடத்தினார்கள். மேலும் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில தலைவர் பரமேஸ்வருக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.

அந்த சமயத்தில், ரவிக்குமாரின் ஆதரவாளர்கள் திபுதிபுவென காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினார்கள். மேலும், கதவு, ஜன்னல்களை அடித்து, நொறுக்கி சூறையாடினார்கள். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உண்டானது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டியா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும், ரகளையில் ஈடுபட்ட ரவிக்குமாரின் ஆதரவாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Next Story