ரூ.500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தகவல்


ரூ.500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி தகவல்
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் நகராட்சி பகுதியில் ரூ.500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கூறினார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. காலனி, பிருந்தாவன் நகர், உள்ளிட்ட 15 வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இப்பகுதிகளில் புதிய சாலைகள், பூங்காக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையொட்டி அவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவான மக்களை தேடி அரசு என்ற அடிப்படையில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதனடிப்படையில், மக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து வருகிறேன். ஓசூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் செம்பருத்தி நகர் பகுதியில் கால்வாய், தெருவிளக்கு மற்றும் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆவலப்பள்ளி அட்கோ பகுதியில் சாலை வசதிகளும், பஸ்தி பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் சிறுவர் பூங்கா, பள்ளிக்கூட சாலை அமைத்து தரப்படும். பிருந்தாவன் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் கூடுதலாக விளக்குகள் அமைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனந்த நகர் பகுதி-2-ல், சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதிகள், ராஜாஜி நகர் பகுதியில் புதிய சாலைகள், சாலைகளின் குறுக்கே சிறு பாலங்கள் அமைத்து தரப்படும்.

ஓசூர் நகராட்சி பகுதியில், ரூ.500 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்போது, அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கி, ஓசூர் நகராட்சி முழு சுகாதாரமாக விளங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓசூர் நகராட்சி முழுவதும் ஒரே சீராக குடிநீர் வினியோகம் செய்ய ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி சிட்டிஜெகதீசன், ஓசூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் தியாகராஜரெட்டி, முரளி, பி.ஆர்.வாசுதேவன், ரமேஷ்பாபு உள்பட பலர் உடன் இருந்தனர். 

Next Story