8 வயது சிறுமி படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் தர்மபுரி, ஓசூரில் நடந்தது


8 வயது சிறுமி படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் தர்மபுரி, ஓசூரில் நடந்தது
x
தினத்தந்தி 16 April 2018 11:00 PM GMT (Updated: 2018-04-17T02:43:03+05:30)

காஷ்மீரில் 8 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தர்மபுரி, ஓசூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தர்மபுரி,

காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தியும் ஜனநாயக மாதர் சங்கம், மகளிர் அமைப்பு மற்றும் சமூகநல்லிணக்க மேடை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக மாதர்சங்க மாவட்ட செயலாளர் கிரைசா மேரி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி பூபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் சிசுபாலன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் சாதிக்பாஷா மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சங்கர், செந்தில்ராஜா, சைன்தாமஸ், ஜெயா, பச்சியப்பன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், சிறுமி படுகொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீதான வழக்கு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும். குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய விவகாரங்களில் அரசியல் மற்றும் அதிகார மையங்களின் தலையீட்டை தடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கண்காணிப்பு குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், மகளிர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில், காஷ்மீரில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கக்கோரியும் ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேற்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ்கான் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சான் பாஷா, செயலாளர் கலீல், மாவட்ட பொருளாளர் ஜூபைர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓசூர் நகர தலைவர் அப்துல்லா ஷெரீப் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஊடக பிரிவின் மாநில பொருளாளர் அல்தாப் அகமத், தலைமை கழக பேச்சாளர் நவ்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் இக்ராம் அகமது, முன்னாள் மாவட்ட செயலாளர் நூர் முகமது, மாவட்ட துணை செயலாளர்கள் பாஷா, அப்துல் முத்தலீப், ரிஸ்வான் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நகர பொருளாளர் ரோஷன் நன்றி கூறினார்.


Next Story