தொடரும் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள்


தொடரும் குடிநீர் தட்டுப்பாடு: காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாடு தொடருவதால் காலிக் குடங்களுடன் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தலைதூக்க தொடங்கி உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக குடிநீர் வசதிக்கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருவது தொடர்ந்துள்ளது. கடந்த வாரம் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஜெகதாபி அருகே மோளக் கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு மனு அளித்து சென்றனர். அங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளை ஆழப்படுத்தி குடிநீர் வினியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். மனுவை பெற்றிருந்த கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதே கிராம மக்கள் நேற்று மீண்டும் மனு கொடுப்பதற்காக காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர்.

மனு குறித்து பொதுமக்கள் கூறுகையில், “கடந்த வாரம் மனு கொடுத்த பின் அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். ஆழ்குழாய் கிணற்றில் மின் மோட்டார்களை சரி செய்யவில்லை. இதனால் மீண்டும் மனு கொடுக்க வந்துள்ளோம். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்” என்றனர். மேலும் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

இதேபோல மணவாடி அருகே கத்தாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு காலிக் குடங்களுடன் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், “எங்களது ஊரில் 250 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்குழாய் கிணறு 250 அடி ஆழத்தில் போடப்பட்டது. அதில் இதுவரை தண்ணீர் தேவை பூர்த்தியாக இருந்து வந்தது. தற்போது அதிகப்படியான வறட்சியின் காரணமாக கடந்த 60 நாட்களாக ஆழ் குழாய் கிணற்றில் தண்ணீர் இல்லை. காவிரி குடிநீரும் சரிவர வருவதில்லை. எனவே குடிநீர் வசதிக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தனர்.

மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் சார்பில் கொடுத்த மனுவில், “கரூர் நகரப்பகுதியில் அம்பேத்கர் சிலை இதுவரை அமைக்கப்படாமல் உள்ளது. தனிநபர் அமைக்க முயன்ற போதும் தடுத்து நிறுத்தப்பட்டன. எனவே அரசு செலவில் அம்பேத்கரின் முழு உருவ சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு அவரது பிறந்தநாளுக்கு மாலை அணிவித்து மரியாதை அளித்திடும் வகையில் சிலை அமைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்திருந்தனர். அப்துல்கலாம் நினைவு அறக்கட்டளை சார்பில் அளித்த மனுவில், குளித்தலை பொது சேவை மையத்தில் பொதுமக்கள் வசதிக்காக கீற்றுக்கொட்டகை பந்தல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இதேபோல பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 230 மனுக்கள் பெறப்பட்டன. மனுவை பெற்ற கலெக்டர் அன்பழகன் அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறைதீர்க்கும் தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story