பெங்களூரு அருகே காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை


பெங்களூரு அருகே காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 16 April 2018 10:45 PM GMT (Updated: 2018-04-17T02:59:13+05:30)

காங்கிரஸ் எம்.எல்.ஏ. வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதால் அவரது ஆதரவாளர்கள் போராட்டம்.

பெங்களூரு,

பெங்களூரு அருகே ஆனேக்கல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. வான சிவண்ணா வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

கர்நாடக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (மே) 12-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 218 தொகுதி களுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. அதில், பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருந்து வரும் சிவண்ணாவுக்கு மீண்டும் காங்கிரஸ் கட்சி ‘சீட்‘ கொடுத்துள்ளது. இதனால் சிவண்ணா, அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்தார்கள்.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா சூர்யாநகரில் உள்ள சிவண்ணா எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான வீட்டிலும், அதே பகுதியில் உள்ள அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது சிவண்ணா குடும்பத்தினரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில் சிவண்ணா எம்.எல்.ஏ.வின் வீட்டின் அருகே வசிக்கும் அவரது ஆதரவாளர்கள் சிலரது வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அதிகாலையில் தொடங்கிய இந்த சோதனை நேற்று மதியம் வரை நடைபெற்றது. வருமான வரித்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளும் சிவண்ணா எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை நடத்தினார்கள். பின்னர் நேற்று மதியம் சிவண்ணாவின் வீட்டில் இருந்து ஒரு சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களை அதிகாரிகள் காரில் எடுத்து சென்றனர். மேலும் சோதனையின் போது முக்கிய ஆவணங்கள், பணம், நகைகள் அதிகாரிகள் கைக்கு சிக்கியதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இதுபற்றி அறிந்ததும் சிவண்ணாவின் வீட்டின் அருகே அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்து விட்டனர்.

பின்னர் அவர்கள், சிவண்ணா வீட்டில் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆனேக்கல்-சந்தாபுரா மெயின் ரோட்டில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சிவண்ணா வீட்டில் சோதனை நடத்துவதற்கு பா.ஜனதாவே காரணம் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள். அதன்பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெங்களூரு புறநகரில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story