காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எப்போது? -தொண்டர்கள் எதிர்பார்ப்பு


காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி எப்போது? -தொண்டர்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 April 2018 4:44 AM IST (Updated: 17 April 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி எப்போது அமையும் என தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மும்பை,

தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி எப்போது அமையும் என தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வரும் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் மராட்டிய சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் இடையே தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைக்கப்படலாம் என தெரிகிறது. கடந்த 2014-ம் ஆண்டு தனித்தனியாக தேர்தலை எதிர்கொண்ட இரண்டு கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்தன. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டணிக்கு தயாராக உள்ள போதிலும் காங்கிரஸ் கட்சியினர் தான் தங்களது முடிவை தெரிவிக்க காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தனியாகவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். குறிப்பாக ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக ‘ஹல்லாபோல்’(தாக்குதல்) எனப்படும் பலகட்ட போராட்டத்தை கடந்த டிசம்பர் மாதம் யவத்மால் மாவட்டத்தில் அவர்கள் தொடங்கினர். இதன்படி மாநிலம் முழுவதும் ஒவ்வொரு கிராமங்களிலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பா.ஜனதாவின் தோல்விகள் குறித்து துறை வாரியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை வரும் அக்டோபர் மாதம் மும்பையில் பிரமாண்ட பேரணியுடன் நிறைவு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

இந்தநிலையில் மாநிலத்தில் பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுப்பதில் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரசிடம் பின்தங்கி விட்டதாக மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான பிரிதிவிராஜ் சவான் கருத்து தெரிவித்தார். கட்சியின் குறிப்பிட்ட சிலர் மராட்டிய காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் மீது அதிருப்தியில் இருப்பதால் உட்கட்சி பூசல் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

இது குறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், காங்கிரஸ் தற்போது ஆக்ரோஷமான எதிர்க்கட்சியாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் கட்சிக்குள் அசோக் சவான் தலைமை மீது அதிருப்தி இருப்பதை ஒப்புக்கொண்ட அவர், அசோக் சவான் தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என கூறி வந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜீவ் சதவ் குஜராத் மாநில பொறுப்பாளராகவும், நிதின் ராவுத் எஸ்.சி./எஸ்.டி. பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து உட்கட்சி பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறினார்.

இதற்கிடையே கூட்டணி தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த், மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளிலும் கட்சியின் சார்பில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், இதைத்தொடர்ந்து தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியபின் கூட்டணி குறித்த கட்சியின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். தேர்தலுக்கு இன்னமும் குறைவான காலமே இருக்கும் நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே கூட்டணி குறித்து வெளிப்படையான அறிவிப்புகள் வராமல் இருப்பது கட்சி தொண்டர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story