வார்டு மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு


வார்டு மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு:  பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 17 April 2018 5:30 AM IST (Updated: 17 April 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

வேலூரை அடுத்த திருவள்ளுவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் வார்டு மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். குறைதீர்வு நாள் கூட்டத்தில், கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் அட்டை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 331 மனுக்கள் பெறப்பட்டன.

வேலூரை அடுத்த அரியூர் அருகே உள்ள திருவள்ளுவர் நகரை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் குறைதீர்வு நாள் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் 10 பேரை மட்டும் மனு அளிக்க உள்ளே செல்ல அனுமதித்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தை சேர்ந்த நாங்கள் இலங்கை நாட்டில் தோட்ட வேலை செய்து வந்தோம். கடந்த 1972-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டுக்கு உட்பட்ட காலத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வேலூர் மாவட்ட கூட்டுறவு நூற்பாலைக்கு மறுவாழ்வு திட்டத்தின் கீழ் வேலூரை அடுத்த திருவள்ளுவர் நகருக்கு குடிபெயர்ந்தோம். 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் மாநகராட்சி 48-வது வார்டில் வசித்து வருகிறோம். தேர்தல்களின்போது அரியூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் எங்கள் வாக்குகளை பதிவு செய்து வந்தோம்.

இந்த நிலையில் எங்கள் பகுதியை வார்டு மறுசீரமைப்பின்படி 53-வது வார்டுக்கு மாற்றப்போவதாகவும், நாங்கள் சித்தேரியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் ‘நோட்டீஸ்’ கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் யாரிடமும் அதிகாரிகள் எவ்வித கருத்தும் கேட்கவில்லை. எங்களுக்கும், சித்தேரியை சேர்ந்தவர்களுக்கும் ஏற்கனவே முன்விரோதம் காணப்படுகிறது. எனவே எங்கள் பகுதியை சேர்ந்தவர்கள், சித்தேரிக்கு வாக்கு பதிவு செய்ய சென்றால் மீண்டும் பிரச்சினைகள், தகராறு ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே எங்கள் பகுதியை 53-வது வார்டுக்கு மாற்றாமல் பழையபடியே அதாவது 48-வது வார்டிலேயே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர், தேர்தல் ஆணையர் உள்பட பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தோம். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் வரும் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம்.

மனு அளித்தவர்கள் தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை, மாவட்ட வருவாய் அலுவலரிடம் ஒப்படைக்க முயன்றனர். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் பெற்று கொள்ளவில்லை. பின்னர் அவர்களிடம், உங்கள் குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஊசூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் பிளஸ்-2 மாணவர்கள் அளித்த மனுவில், கடந்த 2015-16-ம் கல்வியாண்டில் 126 மாணவர்கள் ஊசூர் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி பயின்றோம். எங்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பலமுறை முறையிட்டும் பெற்றுத் தரவில்லை. அதே கல்வியாண்டில் ஊசூர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு விட்டது. எனவே எங்களுக்கு உரிய கல்வி ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் அளித்த மனுவில், எங்கள் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலூர் பழைய பஸ் நிலையம் காந்திசிலை எதிரே சுமார் 18 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வேறு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதியில் அனுமதி இல்லாமல் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இதனால் எங்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. இதுகுறித்து கேட்டால், இரு சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் மீண்டும் தகராறு ஏற்படும் சூழ்நிலை காணப்படுகிறது. எனவே இப்பிரச்சினையில் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கூட்டத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பிரகாஷ், ஆதிதிராவிடர் நல அலுவலர் கஜேந்திரன், சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் பேபிஇந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story