ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்


ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் சங்கம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 April 2018 2:00 AM IST (Updated: 17 April 2018 8:32 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு 

தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் நலச்சங்கம் சார்பில் செயலாளர் சுந்தர்ராஜ் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பனிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை மக்களின் எதிர்காலத்துக்கு பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளது. அங்கு இருந்து வெளியாகும் நச்சுபுகை 40 கி.மீ. சுற்றளவுக்கு படிந்து சுற்றுப்புற சூழலை நாசமாக்கி வருகிறது. விளை நிலங்கள் பொட்டல் காடாக மாறி வருகிறது. மக்களுக்கு பல கொடிய நோய்கள் ஏற்படுகிறது. அதிக அளவில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றை புதுப்பிக்க மாசுகட்டுபாட்டு வாரியம் மறுத்துள்ளது. இதை வரவேற்கிறோம். எனவே இந்த ஆலையை நிரந்தரமாக மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வழிபாட்டு தளங்கள், அரசு ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மூட வேண்டும் 

இதே போன்று, தூத்துக்குடி மாவட்ட குமரி தாயகம் சமூகசேவை அமைப்பு தலைவர் கிங்ஸ்லி, செயலாளர் தென்னவன் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பனிடம் கொடுத்த மனுவில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் காற்றும், நீரும், அதிக அளவில் மாசுபடுகிறது. ஆலையில் இருந்து வெளியேறும் புகை காற்றில் கலந்து பொதுமக்களுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. எனவே ஒட்டுமொத்த சமுதாயத்தின் மக்கள் நலனை கருதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கூறி உள்ளனர்.

Next Story