“தவறான புரிதலால் ரஜினிகாந்தை பற்றி பாரதிராஜா விமர்சிக்கிறார்” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


“தவறான புரிதலால் ரஜினிகாந்தை பற்றி பாரதிராஜா விமர்சிக்கிறார்” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 18 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 10:33 PM IST)
t-max-icont-min-icon

“தவறான புரிதலால்தான் ரஜினிகாந்தை பற்றி பாரதிராஜா விமர்சிக்கிறார்“ என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

முளகுமூடு,

குமரி மாவட்டம் தக்கலை அருகே திக்கணங்கோட்டில் பா.ஜனதா சார்பில் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

சினிமா இயக்குனர் பாரதிராஜா சிறந்த மனிதர். தவறான புரிதலால்தான் ரஜினிகாந்தை கர்நாடக காவி தூதுவர் என்று பாரதிராஜா விமர்சிக்கிறார். கர்நாடகாவை சேர்ந்த சினிமா கலைஞர்கள் தமிழிலும், தமிழகத்தை சேர்ந்தவர்கள் கன்னடத்திலும் நடிக்க கூடாது என்று திரையுலகினர் கூற தயாரா?.

ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கும் முன்பு அதற்கு எதிராக நான் உண்ணாவிரதம் இருந்தேன். அப்போது, ஸ்டெர்லைட் தரப்பில் இருந்து பேச வந்த போது நான் மறுத்தேன். ஸடெர்லைட் விவகாரத்தில் நான் கூறிய கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் பொறுமையாக கவனித்து பேச வேண்டும்.

பாலியல் கொடுமைகளை தடுக்க சட்டங்களை கடுமையாக்கி கடும் தண்டனை வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர் சாதி, மத இல்லாத மனித மிருகங்கள்.

அருப்புக்கோட்டை பேராசிரியை போன்ற பிரச்சினைகள் இனி ஏற்படாமல் இருக்க அனைவருக்கும் உளவியல் பயிற்சி அளிக்க வேண்டும். இந்த பயிற்சி அரசியல்வாதிகளுக்கும் தேவை.

காவிரி பிரச்சினை தொடர்பான அனைத்து பழிகளுக்கும் தி.மு.க., காங்கிரஸ் தான் சொந்தக்காரர்கள். இந்த நிலையில் தி.மு.க. தலைமையில் அறிவித்துள்ள மனித சங்கிலி போராட்டம், மக்களை ஏமாற்றும் வேலை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story