திருக்கோவிலூர் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மோட்டார் சைக்கிள் ஷோரூம் மீது கல்வீச்சு; 3 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே முன்னாள் எம்.எல்.ஏ.வின் மோட்டார் சைக்கிள் ஷோரூம் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருக்கோவிலுார்
திருக்கோவிலூர் அருகே உள்ள தேவனூர் கூட்டுரோடு பகுதியில் வசிப்பவர் வி.ஏ.டி. கலிவரதன் (வயது 55). இவர் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டுவரை முகையூர் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆவார். பதவிக்காலம் முடிந்த பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க. வில் இணைந்தார். பின்னர் அங்கிருந்தும் விலகி தற்போது பா.ஜ.க வில் உள்ளார். கலிவரதனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் மணம்பூண்டி தேவனுார் கூட்டுரோட்டில் உள்ளது.
இந்த நிலையில் டி.தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த நடேசன் மகன் முத்துக்குமரன் (வயது 22), ராஜாங்கம் மகன் பாபு (வயது 27), ராமகிருஷ்ணன் மகன் புகழேந்தி (வயது 30) மற்றும் மூர்த்தி ஆகிய 4 பேரும் ஒன்று சேர்ந்து ஒரு காரில் வந்து கலிவரதனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் ஷோரூம் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள். இதில் ஷோரூமின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
மேலும் உள்ளே இருந்த 2 மோட்டார் சைக்கிள்களும் சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ 2 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த கல்வீச்சு சம்பவத்தால் ஷோரூமில் இந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருக்கோவிலுார்-விழுப்புரம் மெயின்ரோட்டில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், அரகண்டநல்லூர் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது.
பின்னர் இது குறித்து கலிவரதன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துக்குமரன், பாபு, புகழேந்தி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மூர்த்தியை வலைவீசிடி தேடிவருகின்றனர். பா.ஜ.க வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மோட்டார் சைக்கிள் ஷோரூம் மீது கல்வீசி தாக்கிய இந்த சம்பவம் திருக்கோவிலுார் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
Related Tags :
Next Story