திருவண்ணாமலையில் ஆய்வு கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் நடந்தது
திருவண்ணாமலையில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையர் எம்.மாலிக் பெரோஸ்கான் தலைமை தாங்கினார். கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சி, மாவட்ட ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகள் மறுவரையறை குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் உள்ளனவா? என்றும், உள்ளாட்சி தேர்தலுக்கு வேண்டிய படிவங்கள், எழுது பொருட்கள், வாக்குப் பெட்டிகள், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் ஆகியவற்றின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளனவா? என்றும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும் வாக்குப் பெட்டிகள் மற்றும் உள்ளாட்சி தேர்தலுக்கு வேண்டிய பொருட்கள் சரிவர பராமரித்திட உதவி இயக்குனர் அளவிலான அலுவலர்களை நியமித்து ஊராட்சி ஒன்றியங்களில் பராமரித்திடவும், நகரப் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நல்ல நிலையில் உள்ளனவா? என்பதைக் கண்காணிக்கவும் அனைத்து உள்ளாட்சி அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, நகராட்சி நிர்வாகம் மண்டல இயக்குனர் ஜெயக்குமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவாளிபிரியா, நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story