போலீசாரால் தேடப்பட்டு வந்த 12 பேர் கோர்ட்டில் சரண், கைது செய்து வேலூர் சிறையில் அடைப்பு


போலீசாரால் தேடப்பட்டு வந்த 12 பேர் கோர்ட்டில் சரண், கைது செய்து வேலூர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 18 April 2018 3:45 AM IST (Updated: 18 April 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த 12 பேர் கோர்ட்டில் சரணடைந்தனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா பகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் மாரியம்மன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி காணும் பொங்கல் பண்டிகையன்று விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதனை பார்ப்பதற்காக ஆலத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆலத்தூர் காலனி வழியாக சென்றனர். அப்போது காலனி பகுதியை சேர்ந்த சிலருக்கும், விளையாட்டு போட்டி பார்க்க சென்றவர்களுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.

பின்னர் இருதரப்பினர் மோதலாக மாறியது. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியாக திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 12 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த முத்து (வயது 36), ஆறுமுகம் (55), துரை (65), அண்ணாமலை (75), சமுத்திரராஜன் (46), கிருஷ்ணன் (66), பரசுராமன் (39), வேலு (39), ராமநாதன் (31), கதிரேசன் (38), குருநாதன் (45), சுப்பிரமணி (60) ஆகிய 12 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர்கள் 12 பேரும் நேற்று திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் சரண் அடைய திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டிற்கு வந்தனர்.

இதனையடுத்து நீதிபதி மகிழேந்தி, அவர்களை கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர் போலீசார் அவர்கள் 12 பேரையும் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story