முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் இல்லை - அ.தி.மு.க. குற்றச்சாட்டு


முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் இல்லை - அ.தி.மு.க. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 April 2018 4:45 AM IST (Updated: 18 April 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் முதல்- அமைச்சரின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் இல்லை என்று அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை முதல்-அமைச்சரும், கவர்னரும் இணைந்து பொதுமக்களுக்கு மாதந் தோறும் வழங்க வேண்டிய இலவச அரிசியை வழங்காமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இலவச அரிசி வழங்க கடந்த 2 ஆண்டுகளாக பட்ஜெட்டில் ரூ.412 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 23 மாதங்களில் 7 முறை மட்டுமே இலவச அரிசியை வழங்கியுள்ளது. இதற்காக ரூ.124 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

அப்படியானால் பட்ஜெட்டில் இலவச அரிசிக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது. இதுவரை இலவச அரிசி போடாததற்காக புதுவை அரசு ஒவ்வொருவரின் ரேஷன் கார்டுக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அரிசி வழங்கப்படாததற்காக பொதுமக்களிடம் முதல்- அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.

புதுச்சேரி முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் காவல்துறை, சட்டம்-ஒழுங்கு இல்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலையில் தற்போது தான் குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இது குறித்து கேட்டால் அரசியல் தலையீடு என்கின்றனர். எனவே குற்றவாளிகளை மறைத்த போலீஸ் அதிகாரிகள் யார்? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை. முத்தியால்பேட்டையில் நடந்த பெண் கொலையில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. புதுவையில் கடந்த 10 நாட்களில் 4 வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் 2 சம்பவம் எனது தொகுதியில் நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இதன் மீது அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.

சென்னைக்கு பிரதமர் வருகை தந்தபோது தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தினார். ஆனால் புதுவை முதல்- அமைச்சரோ பிரதமரை சந்திக்காமல் மறுநாள் விழாவில் கலந்துகொண்டது வெட்கக்கேடானது. புதுவை மாநிலத்தில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவது இல்லை என அ.தி.மு.க. பலமுறை வலியுறுத்தியுள்ளது. புதுவையை பொருத்தவரை முதல்-அமைச்சரின் கட்டுப்பாட்டில் அரசு ஊழியர்கள் இல்லை. கவர்னர் மாளிகைதான் அரசு செயலகமாக செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story