கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி


கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 18 April 2018 3:30 AM IST (Updated: 18 April 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோத்தகிரி,

நீலகிரி வனக்கோட்டம் கட்டபெட்டு வனச்சரகம் நடுஹட்டி பீட்டுக்கு உட்பட்ட கெட்டிக்கம்பையில் வனப்பகுதியையொட்டி தேயிலை தோட்டங்கள் அமைந்து உள்ளன. இந்த வனப்பகுதியில் சிறுத்தைப்புலி, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் வாழ்கின்றன.

இந்த நிலையில் கெட்டிக்கம்பையில் உள்ள தேயிலை தொழிற்சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் நேற்று முன்தினம் தேயிலை பறித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு சிறுத்தைப்புலி ஒன்று படுத்து இருந்தது. இதை பார்த்து அச்சமடைந்த தொழிலாளர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் படுத்து இருந்த சிறுத்தைப்புலி எந்த அசைவும் இன்றி கிடந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் அதன் அருகே சென்று பார்த்தனர். அப்போது சிறுத்தைப்புலி இறந்து கிடந்தது தெரிந்தது. இதுபற்றி தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி கட்டபெட்டு வனச்சரகர் கணேஷ் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பின்னர் வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் சரவணகுமார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுத்தைப்புலியின் உடலை பார்த்தார்.

சிறுத்தைப்புலியின் உடலை கீழ்கோத்தகிரி கால்நடை மருத்துவர் ரேவதி பிரேத பரிசோதனை செய்தார். தேயிலை தோட்டத்தில் இருந்து வனத்துறையினர் சிறுத்தைப்புலியை வேறு இடத்துக்கு தூக்கி சென்றனர். பின்னர் சிறுத்தைப்புலியின் உடல் தீயிட்டு எரிக்கப் பட்டது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தனியார் தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்தது சுமார் 6 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தைப்புலி ஆகும். உடல் நலக்குறைவு காரணமாக இறந்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. எனினும் சிறுத்தைப்புலியின் உடல் பாகங்கள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் வந்த பிறகுதான் இறந்ததற்கான காரணம் தெரியவரும், என்றனர்.

இதுபற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Next Story