வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்


வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 18 April 2018 4:15 AM IST (Updated: 18 April 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தை உதவி கலெக்டர் ராமமூர்த்தி தலைமை தாங்கி நடத்தினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் அளித்தனர்.

இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளன. குறிப்பிட்ட சில கூட்டுறவு சங்கங்களில் ஏற்கனவே முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்பாட்டை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மின்இணைப்பு பெறுவதற்காக கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா கேட்கும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும்.

கோடை காலத்தில் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களை வழங்க வேண்டும். கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி பேசுகையில், கூட்டுறவு சங்க முறைகேடு புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மின்இணைப்பு கேட்கும் விவசாயிகளுக்கு தனிபட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உழவன் செயலியில் பல்வேறு வசதிகள், தகவல்கள் உள்ளன. இதன்மூலம் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் விவசாயிகள், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Next Story