புதிதாக 4 சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் அரசு ஒப்புதல்


புதிதாக 4 சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 18 April 2018 3:07 AM IST (Updated: 18 April 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் புதிதாக 4 சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் அமைக்க மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

மும்பை,

நாட்டின் நிதி நகரமான மும்பையில் சைபர் கிரைம் எனப்படும் இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்ட தகவலில், நாட்டிலேயே மும்பை நகரத்தில் தான் அதிகளவு சைபர் குற்றங்கள் நடந்திருப்பதாக தெரிவித்து இருந்தது. இதன்படி மும்பையில் 4 ஆயிரத்து 172 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தன.

அதே நேரத்தில் சைபர் குற்ற வழக்குகளை கையாள மும்பையில் ஒரே ஒரு சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையம் தான் உள்ளது.

பெருகி வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சில மாதங்களுக்கு முன் மும்பையில் உள்ள 93 போலீஸ் நிலையங்களில் சைபர் கிரைம் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், மும்பை நகரத்தில் சைபர் குற்றங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக புதிதாக 4 சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மாநில அரசும் ஒப்புதல் அளித்து உள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘புதிதாக அமைய உள்ள சைபர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களில் 186 பணியிடங்கள் உருவாக்கப்படும். இவர்களில் பலர் உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக இருப்பார்கள். இந்த போலீஸ் நிலையங்கள் துணை போலீஸ் கமிஷனர் மேற்பார்வையில் செயல்படும்’ என்றார். 

Next Story