பூலாம்பட்டி அருகே மூதாட்டி கொலை வழக்கு: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை


பூலாம்பட்டி அருகே மூதாட்டி கொலை வழக்கு: வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 18 April 2018 5:06 AM IST (Updated: 18 April 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

பூலாம்பட்டி அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

சேலம்,

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே உள்ள கூடக்கல் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 65). இவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கோவிந்தம்மாளுக்கு சரியாக கண் தெரியாது. இந்தநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவருடைய வீட்டிற்கு சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த நந்தகுமார் (27) என்பவர் சென்றார். இவரை தன்னுடைய பேரன் என நினைத்து வீட்டிற்குள் கோவிந்தம்மாள் தங்க வைத்தார்.

ஆனால் நந்தகுமார் கோவிந்தம்மாள் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையினை பறித்து சென்று விட்டார். இது தொடர்பான புகாரின்பேரில் பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நந்தகுமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த கோப்புகாடு பகுதியை சேர்ந்த பெரியசாமி (24) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு சங்ககிரி கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் மூதாட்டி கொலை வழக்கு சேலம் 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், நந்தகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் மற்றும் பெரியசாமிக்கு 7 ஆண்டு சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து நந்தகுமார், பெரியசாமி ஆகியோர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story