உலக அமைதி வேண்டி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை


உலக அமைதி வேண்டி காயல்பட்டினத்தில் முஸ்லிம்கள் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 19 April 2018 2:15 AM IST (Updated: 18 April 2018 8:37 PM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் நேற்று உலக அமைதி வேண்டி முஸ்லிம்கள் நடத்திய சிறப்பு பிரார்த்தனையில்(அபூர்வ துஆ) திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி, 

காயல்பட்டினத்தில் நேற்று உலக அமைதி வேண்டி முஸ்லிம்கள் நடத்திய சிறப்பு பிரார்த்தனையில்(அபூர்வ துஆ) திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு பிரார்த்தனை 

காயல்பட்டினம் கடற்கரை சாலையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற மஜ்லிஸீல் புகாரிஷ் ‌ஷரீபு சபையின் 91–வது ஆண்டு விழா கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக காலையில் உலக அமைதி வேண்டியும், நல்ல மழை வேண்டியும், அனைத்து மக்களும் வளமுடன் வாழ வேண்டியும், சிறப்பு பிரார்த்தனை(அபூர்வ துஆ) நடந்தது.

காயல்பட்டினம் ஹாமிதிய்யா மதரசா சபை பேராசிரியர் காஜா முகைதீன் ஆலிம், கத்முல் புகாரிஷ் ‌ஷரீபு எனும் ஏற்றமிகு பிரார்த்தனையை தமிழ் மொழிபெயர்ப்புடன் ஓதி மஜ்லிஸை நிறைவு செய்தார்.

எம்.எல்.ஏ.க்கள் 

நிகழ்ச்சியில் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன், மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வாவு வஜீஹா கல்லூரி செயலாளர் முஹ்தஸிம், கேபிள் டி.வி. உரிமையாளர் சங்க தலைவர் காயல் இளவரசு,

அ.தி.மு.க. நகர செயலாளர் செய்யது இப்ராஹிம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் காயல் மவுலானா, தி.மு.க. நகர பொறுப்பாளர் முத்து முகமது, ம.தி.மு.க. மாவட்ட பொருளாளர் காயல் அமானுல்லா, முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

முஸ்லிம்கள் ஆசி 

பேராசிரியர் காஜா முகைதீன் ஆலிம் பிரார்த்தனையை முடித்தவுடன், அவரிடம் ஏராளமான முஸ்லிம்கள் ஆசி பெற்றனர். பின்னர் புகாரிஷ் ‌ஷரீபு சபையினர் இஸ்லாமிய பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக காஜா முகைதீன் ஆலிமை அவரது இல்லத்துக்கு அழைத்து சென்றனர். மாலையில் சன்மார்க்க நிகழ்ச்சிகள் நடந்தது.

இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்ட ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பந்தல் வசதி மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இன்று, நேர்ச்சை வினியோகம் 

இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு நேர்ச்சை உணவு வினியோகம் செய்யப்படுகிறது. ஏற்பாடுகளை மஜ்லிஸீல் புகாரிஷ் ‌ஷரீபு சபை மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.

Next Story