சித்திரை திருவிழாவையொட்டி சங்கரநாராயண சுவாமி கோவில் யானை ‘பிடிமண்’ எடுக்கும் நிகழ்ச்சி
சித்திரை திருவிழாவையொட்டி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் யானை ‘பிடிமண்‘ எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சங்கரன்கோவில்,
சித்திரை திருவிழாவையொட்டி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் யானை ‘பிடிமண்‘ எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சித்திரை திருவிழா
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சைவ–வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலை, இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
‘பிடிமண்‘ எடுத்த யானை
சித்திரை திருவிழாவை முன்னிட்டு கோவில் யானை கோமதி ‘பிடிமண்‘ எடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி ‘பிடிமண்‘ எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலையில் கோவிலில் இருந்து கோமதி அம்பாள் சமேத சந்திரசேகர சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு கோவில் யானை கோமதி ‘பிடிமண்‘ எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சித்திரை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 27–ந் தேதி காலையில் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story