உலக புத்தக தினவிழாவையொட்டி மாணவ–மாணவிகளுக்கு கதை, பேச்சு போட்டிகள் மாவட்ட நூலக அலுவலர் தகவல்
உலக புத்தக தினவிழாவையொட்டி, மாணவ–மாணவிகளுக்கு கதை, பேச்சு, ஓவியப்போட்டிகள் நடத்தப்படுவதாக மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன் தெரிவித்து உள்ளார்.
நெல்லை,
உலக புத்தக தினவிழாவையொட்டி, மாணவ–மாணவிகளுக்கு கதை, பேச்சு, ஓவியப்போட்டிகள் நடத்தப்படுவதாக மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–
கதை–பேச்சு போட்டி
உலக புத்தக தினவிழாவை முன்னிட்டு மாவட்ட மைய நூலகத்தில் கோடை முகாம் சிறப்பு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, வருகிற 23–ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு 1 முதல் 8–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்கு கதை சொல்லும் போட்டியும், 24–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணிக்கு ‘தலை குனிந்து வாசித்தால் தலை நிமிர்ந்து வாழலாம்‘ என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடைபெற உள்ளது.
25–ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு 1 முதல் 5–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்கு ‘சுற்றுச்சூழல் தூய்மை’ பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஓவியப்போட்டியும், 8 முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் மாணவ–மாணவிகளுக்கு ‘தாமிரபரணி நதிநீர் வழித்தடங்களை பாதுகாக்கும் வழிமுறை‘களை ஓவியமாக வரைந்திடும் போட்டியும் நடைபெற உள்ளது.
பரிசு
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ–மாணவிகள் மாவட்ட மைய நூலகத்தில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நேரிலும், 0462–2561712 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் போட்டிகள் பற்றிய விவரம் அறிய நூலகர் முத்துகிருஷ்ணனை 9789710361 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு 25–ந்தேதி மாலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் உலக புத்தக தினவிழாவில் கலெக்டரால் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். எழுத்தாளர்கள் கலாப்ரியா மற்றும் நாறும்பூநாதன் ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர். மாலை 5 மணிக்கு கவிஞர் கணபதிசுப்ரமணியார் தலைமையில் ‘அறிவை பண்படுத்துவது புத்தகங்களா? இணையதளங்களா?’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது.
புத்தக கண்காட்சி
உலக புத்தக தினவிழாவையொட்டி மாவட்ட மைய நூலகத்தில் வருகிற 23–ந்தேதி முதல் 25–ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. இதில் சிறப்பு தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இவ்வாறு மாவட்ட நூலக அலுவலர் முனியப்பன் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story