சிவகாசி அருகே பஸ் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி


சிவகாசி அருகே பஸ் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 19 April 2018 4:15 AM IST (Updated: 19 April 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே தனியார் பஸ் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் இளையராஜா (வயது 20). சத்யா நகரை சேர்ந்த முனியசாமி என்பவரது மகன் மாயக்கண்ணன்(21). இவர்கள் இருவரும் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இளையராஜாவுக்கு சொந்தமான இரு சக்கர வாகனத்தில் இருவரும் நேற்று காலை கல்லூரிக்கு சென்றுள்ளனர். வாகனத்தை இளையராஜா ஓட்டிச் சென்றார்.

மயிலாடுதுறை-கோணம்பட்டி விலக்கு இடையே சென்ற போது சாத்தூரில் இருந்து சிவகாசி நோக்கி வந்த தனியார் பஸ் மோதியது. இதில் இளையராஜா சம்பவ இடத்திலும் மாயக்கண்ணன் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலும் உயிரிழந்தனர்.

இருவரின் உடலும் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறியதால் பரபரப்பு உருவானது.

சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். இதைதொடர்ந்து மாலையில் உடலை பெற்றுச்சென்றனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் எறவார்பட்டியை சேர்ந்த மாயகிருஷ்ணன்(26) என்பவரை கைது செய்தனர். 

Next Story