தென்னை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்


தென்னை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
x
தினத்தந்தி 19 April 2018 4:00 AM IST (Updated: 19 April 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் துருசணாம்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்தது. மேலும், தென்னை மரங்களை நாசப்படுத்தியது.

அந்தியூர், 

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் மான், சிறுத்தை, புலி, கரடி, யானை, குரங்கு உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமப்பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. குறிப்பாக யானைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புகுந்து கரும்பு, வாழை, மக்காச்சோளம் போன்ற பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 2 மணி அளவில் ஒற்றை ஆண் யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. இந்த யானை பர்கூர் அருகே உள்ள துருசணாம்பாளையம் பகுதியில் விவசாயி சக்திவேல் (வயது 45) என்பவருடைய தோட்டத்துக்குள் புகுந்தது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த பீன்ஸ் பயிர்களை நாசப்படுத்தியது.

யானையின் பிளிறல் மற்றும் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த சக்திவேல் எழுந்தார். பின்னர் வீட்டின் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது யானை ஒன்று தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தை துதிக்கையால் வேரோடு சாய்த்துக்கொண்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மற்ற விவசாயிகளுக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்தார். அங்கு வந்த விவசாயிகள் ஒற்றை ஆண் யானையை தீப்பந்தம் காட்டியும், பட்டாசுகள் வெடித்தும் காட்டுக்குள் விரட்ட முயன்றனர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று காலை 6 மணி அளவில் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் வன அதிகாரி பாலகிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தோட்டத்தில் யானை சேதப்படுத்திய பீன்ஸ் பயிர்கள் மற்றும் தென்னை மரங்களை பார்வையிட்டனர்

இதுகுறித்து விவசாயி சக்திவேல் கூறும்போது, ‘தோட்டத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் பீன்ஸ் பயிரை சாகுபடி செய்து உள்ளேன். மேலும் தென்னை மரங்களையும் வளர்த்து வருகிறேன். நேற்று இரவு (நேற்று முன்தினம்) புகுந்த ஆண் யானை, ¼ ஏக்கர் பரப்பளவில் பீன்ஸ் பயிர்களை நாசப்படுத்தியது. மேலும் 10-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி அதன் குருத்துகள், ஓலைகளை சாப்பிட்டு உள்ளது.

அதனால் வனத்துறையினர், யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தாத வகையில் அகழி அமைக்க வேண்டும். மேலும், நாசமான பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Next Story