சென்னை சூளைமேட்டில் நர்சை கொலை செய்து நகைகள் கொள்ளை: பக்கத்து வீட்டு வாலிபர் கைது


சென்னை சூளைமேட்டில் நர்சை கொலை செய்து நகைகள் கொள்ளை: பக்கத்து வீட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 April 2018 5:00 AM IST (Updated: 19 April 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னை சூளைமேட்டில் நர்சை படுகொலை செய்து, நகையை கொள்ளையடித்த பக்கத்து வீட்டு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள வடக்கு புதுப்பேட்டையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 60), விவசாயி. இவரது மகள்கள் நந்தினி, வேல்விழி, மகன் யுவராஜ். இவர்களில் 2-வது மகள் வேல்விழி (19) டிப்ளமோ நர்சிங் படித்துள்ளார். 3 வாரங்களுக்கு முன்பு சென்னை வந்தார்.

சூளைமேடு வீரபாண்டி நகர் முதல் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனது தோழிகள் 3 பேரோடு வேல்விழி தங்கினார். இவர் வீடுகளுக்கு சென்று நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் ‘ஹோம்நர்சு’ ஆக வேலைபார்த்து வந்தார். இவர் தினமும் தனது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரோடு செல்போனில் பேசுவது வழக்கம்.

கடந்த 6-ந் தேதி அவர் குடும்பத்தினரோடு பேசவில்லை. இதனால் அவரது தந்தை ராஜேந்திரன் வேல்விழிக்கு செல்போனில் தொடர்புகொண்டார். ஆனால் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அன்று இரவு வேல்விழியோடு தங்கியுள்ள அவரது தோழி சத்தியாவிடம் செல்போனில் பேசி வேல்விழி பற்றி கேட்டார். வேல்விழி வீட்டில் இல்லை என்றும், அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்றும் சத்தியா பதில் அளித்தார்.

இதனால் ராஜேந்திரன் பதறியடித்துக்கொண்டு சென்னை வந்து வேல்விழியை பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. 2 நாட்கள் தேடிப்பார்த்துவிட்டு 9-ந் தேதி ராஜேந்திரன் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் இதுபற்றி புகார் கொடுத்தார்.

சூளைமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வேல்விழி வசிக்கும் வீட்டிற்கு பக்கத்தில் அஜித்குமார் (23) என்பவர் தனது மனைவி மகாலட்சுமியோடு வசித்து வந்தார். அஜித்குமாரின் மனைவி மகாலட்சுமி ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலைபார்த்தார். வேல்விழி காணாமல்போனது பற்றி அஜித்குமாரிடம் போலீசார் துருவித்துருவி விசாரித்தனர்.

4 முறை அவரிடம் போலீசார் விசாரித்தும் சரியாக பதில் சொல்லவில்லை. 5-வது முறை அழைத்து விசாரிக்கும்போது, அஜித்குமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.

வேல்விழியை நான் தான் கொலை செய்தேன் என்று அஜித்குமார் ஒப்புக்கொண்டார். வேல்விழி அணிந்திருந்த தங்ககம்மல்கள், ஒரு மோதிரம் மற்றும் செல்போனை கொள்ளையடித்ததாக அஜித்குமார் தெரிவித்தார். வேல்விழியின் பிணத்தை பிளாஸ்டிக் சாக்கில் மூட்டையாக கட்டி கோயம்பேடு மார்க்கெட் அருகே, தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள காலி மைதானத்தில் மின்சார கேபிள் வயரை சுற்றிவைக்கும் இரும்பு ரோலருக்குள் மறைத்துவைத்துள்ளதாக தெரிவித்தார்.

உடனே அஜித்குமாரை போலீசார் கோயம்பேடு அழைத்துச்சென்றனர். அங்கு இரும்பு ரோலருக்குள் வேல்விழியின் பிணம் உள்ள சாக்குமூட்டையை அஜித்குமார் அடையாளம் காட்டினார். 6-ந் தேதியே வேல்விழி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் 17-ந் தேதி இரவு தான் வேல்விழியின் பிணத்தை போலீசார் மீட்டனர். இதனால் பிணம் அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது.

வேல்விழியின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வேல்விழி கொலை செய்யப்பட்டது குறித்து அவரது தந்தை ராஜேந்திரனுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். ராஜேந்திரன் கதறி அழுதபடி சென்னை வந்தார்.

போலீசார் அஜித்குமாரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது வேல்விழியை கொலை செய்தது பற்றி அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரது வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எனது சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பழனியார்பாளையம் தேனாக்குளம். பட்டப்படிப்பு படித்துள்ள எனக்கு வேலை கிடைக்கவில்லை. திருச்சியை சேர்ந்த மகாலட்சுமியை பேஸ்புக் மூலம் காதலித்து நல்ல வேலையில் இருப்பதாக பொய்சொல்லி 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்கு பின் சூளைமேடு, வீரபாண்டி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடிவந்தோம்.

எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் 3 வாரங்களுக்கு முன்பு வேல்விழி குடிவந்து 3 தோழிகளோடு தங்கியிருந்தார். வேல்விழியும், எனது மனைவியும் நர்சு என்பதால் இருவரும் நெருங்கி பழகினார்கள். எனது வீட்டிற்கு வேல்விழி அடிக்கடி வந்து எனது மனைவியுடன் பேசிக்கொண்டிருப்பார். என்னிடமும் அன்பாக பழகினார்.

9-ந் தேதி எனது மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் சிறப்பாக கொண்டாட தீர்மானித்தேன். நான் வேலை செய்வதாக எனது மனைவியிடம் பொய் சொல்லியிருந்தேன். எனது சம்பள பணத்தை கேட்டு அடிக்கடி மனைவி தொல்லை கொடுத்துவந்தார். சம்பள பணத்தில் உனக்கு நல்ல பிறந்தநாள் பரிசு வாங்கப்போகிறேன் என்று சமாதானப்படுத்தி வந்தேன்.

ஆனால், பிறந்தநாள் பரிசு வாங்க என்னிடம் பணம் இல்லை. 6-ந் தேதி எனது மனைவி வேலைக்கு சென்றுவிட்டார். வேல்விழி அவரது வீட்டில் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான் வேல்விழியிடம் ரூ.3 ஆயிரம் கடனாக தரும்படி கேட்டேன். ஆனால் வேல்விழி பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

நான் தொடர்ந்து அவரிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்தேன். ஒரு கட்டத்தில் அவர் கோபப்பட்டு என்னை திட்டிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், வேல்விழியை அவரது சுடிதார் துப்பட்டாவினால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பிணத்தை பிளாஸ்டிக் சாக்குமூட்டைக்குள் வைத்து கட்டினேன். 6-ந் தேதி பகல் 11 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. மதியம் 1.30 மணி வரை வேல்விழியின் பிணம் இருந்த சாக்குமூட்டையை அவரது வீட்டிலேயே வைத்திருந்தேன். அதன்பிறகு அந்த சாக்குமூட்டையை எனது வீட்டிற்கு தூக்கிவந்தேன்.

இரவு 8 மணிக்கு எனது மனைவி வந்துவிடுவாள் என்பதால் மாலை 6.30 மணி அளவில் ஒரு ஆட்டோவை வாடகைக்கு பிடித்து வந்து வேல்விழியின் பிண மூட்டையை அந்த ஆட்டோவில் ஏற்றி கோயம்பேடுக்கு வந்தேன். அங்கு தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள காலி மைதானத்தில் மின்சார கேபிள் வயர்களை சுற்றிவைக்கும் இரும்பு ரோலர் இருந்தது. அந்த ரோலருக்குள் சாக்கு மூட்டையை வைத்துவிட்டு நைசாக வந்துவிட்டேன்.

அதன்பிறகு தினமும் ஒருமுறை கோயம்பேடுக்கு சென்று வேல்விழியின் பிணமூட்டை இருக்கிறதா? என்று பார்த்தேன். போலீசார் 5-வது முறையாக என்னிடம் விசாரித்தபோது வேல்விழியைக் கொன்றதை ஒப்புக்கொண்டேன்.

வேல்விழியிடம் கொள்ளையடித்த தங்ககம்மல்கள், மோதிரம், வெள்ளி கொலுசு ஆகியவற்றை விற்று அந்த பணத்தின் மூலம் ஒரு வெள்ளிக்கொலுசு வாங்கி எனது மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்து, விழாவையும் மகிழ்ச்சியோடு கொண்டாடினோம். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக நான் வேல்விழியை கொலை செய்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

வேல்விழியின் தங்ககம்மல்கள், மோதிரம், வெள்ளிக்கொலுசு மற்றும் அவரது செல்போனை போலீசார் மீட்டனர். விசாரணைக்கு பின் அஜித்குமார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story