தேனி அருகே தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


தேனி அருகே தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x
தினத்தந்தி 19 April 2018 4:00 AM IST (Updated: 19 April 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே குன்னூரில் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார்.

தேனி,

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில், கிராம சுயாட்சி பிரசார திட்டம் மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக முழு தூய்மை பணிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தேனி அருகே குன்னூரில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிகளை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தொடங்கி வைத்தார். இக்கிராமத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி, வீதிகளில் தூய்மைப்பணி, கழிவுநீர் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணி போன்றவை தொடங்கின. பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு மாதிரி கிராமசபை கூட்டம், விழிப்புணர்வு நாடகங்கள் ஆகியவை நடந்தன.

நிகழ்ச்சியின் போது, வீதி, வீதியாக சென்று தூய்மைப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது பொதுமக்களின் வீடுகளில் உள்ள கழிப்பிடங்களையும் அவர் பார்வையிட்டார். கழிப்பிடங்களை தூய்மையாக பயன்படுத்தும் வீட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.

பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை கண்ட இடங் களில் வீசி எறியாமல், மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பின்னர் தூய்மை காவலர்கள் குப்பை சேகரிக்க வரும் போது வழங்கிட வேண்டும். மக்கும் குப்பைகளை பயன்படுத்தி இயற்கை உரமாகவும், மக்காத குப்பைகள் மூலம் மறு சுழற்சி முறையில் தார்ச்சாலை அமைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழல்களான நீர், நிலம், காற்று இவற்றை மாசில்லாமல் பாதுகாக்க திடக்கழிவு மேலாண்மையினை நல்ல முறையில் கடைபிடிக்க வேண்டும்.

திறந்தவெளியில் மலம் கழிப்பதினால் சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதோடு, தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்கள் சுற்றுப்புறச் சூழல்களை பாதுகாக்க திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிர்த்திட வேண்டும். கிராமசபை கூட்டங்கள் கிராமப்புற பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம், சாலை வசதி போன்ற பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காகவே நடத்தப்படுகிறது. எனவே, கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story