மே மாதம் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம் ஆசிரியர் கழகம் முடிவு


மே மாதம் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம் ஆசிரியர் கழகம் முடிவு
x
தினத்தந்தி 19 April 2018 4:15 AM IST (Updated: 19 April 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறையில் திருத்தும்பணியை தொடங்கு என கூறியதை கண்டித்து மே மாதம் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வாயிற்கூட்டம் தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கல்வி மாவட்ட செயலாளர் சாமிநாதன் தலைமை தாங்கினார். கல்வி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஆனந்த், மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மண்டல மகளிர் பிரிவு செயலாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் மனோகரன், மாவட்ட செயலாளர் இளையராஜா மாநில தனியார் பள்ளி செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் ஒவ்வொரு ஊதியக்குழுவிலும் ஆசிரியர்கள் வஞ்சிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே 2 பொதுத்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தி வருகிறோம். தற்போது பிளஸ்-1 பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு 1½ மாத கால தேர்வுபணி அதைத்தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி என தொடர்ந்து நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். விடைத்தாள் திருத்தும் பணி மே 19-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மே மாத கோடைவிடுமுறையை பறிக்கும் வகையில் விடைத்தாள் திருத்தும் பணி செய்ய நிர்ப்பந்திக்கும் போது நாங்கள் கண்டிப்பாக கோடை விடுமுறையை விட்டுக்கொடுத்து மே மாதம் விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள முடியாது. அதற்காக பிளஸ்-2 மாணவர்கள் பாதிக்கும்படி ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டோம்.

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தி விட்டு பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணியை ஜூன் முதல்வாரத்தில் திருத்துகிறோம் என்றால் அதை ஏற்கவில்லை. மே மாதம் பிளஸ்-1 விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம். தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதிய முரண்பாடு நிலுவைத்தொகை பெறுவது, பகுதிநேர ஆசிரியர், அரசு ஊழியர்களை முழுநேர பணியாளர்களாக மாற்றுவது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மே 1-ந்தேதி கோட்டை நோக்கி முற்றுகை போராட்டத்தை எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

முடிவில் மாவட்ட பிரசார செயலாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். 

Next Story