காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 19 April 2018 4:30 AM IST (Updated: 19 April 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே தென்னமநாடு கிராம மக்கள் நேற்று பட்டுக்கோட்டை-தஞ்சை சாலையில் உள்ள வல்லம் பிரிவு சாலை பகுதியில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் உள்ளிட்ட விளை நிலங்களை பாதிக்க கூடிய திட்டங்களை செயல்படுத்த கூடாது. காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது.

போராட்டத்தின்போது மாட்டு வண்டிகளை சாலையின் குறுக்காக நிறுத்தி வைத்து இருந்தனர். இந்த மறியல் போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், வக்கீல்கள், விவசாயிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

கிராம மக்களின் திடீர் சாலை மறியல் காரணமாக தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. 

Next Story