ராணுவவீரர் மனைவியின் கைப்பையை திருடிய போலீஸ் ஏட்டு கைது
கொடைரோடு ரெயில் நிலையத்தில் ராணுவவீரர் மனைவியின் கைப்பையை திருடிய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த பழ வியாபாரியும் சிக்கினார்.
கொடைரோடு,
கொடைரோடு சுதந்திராபுரத்தை சேர்ந்தவர் சிங்கர் உடையான் (வயது 33). இவர் காஷ்மீரில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி சண்முகபிரியா (27). இவர்களுக்கு ஒரு கைக் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் சண்முகபிரியா டெல்லி செல்வதற்காக தனது கணவர், குழந்தையுடன் கொடைரோடு ரெயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ய வந்தார்.
அப்போது தனது கணவர் சிங்கர்உடையான், தனது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு முதலாவது பிளாட்பாரத்தில் உள்ள இருக்கையில் உட்கார்ந்திருந்தார். தனது கைப்பையை கணவரின் அருகில் உள்ள இருக்கையில் வைத்துவிட்டு சண்முகபிரியா டிக்கெட் முன்பதிவு செய்ய வரிசையில் நின்று கொண்டிருந்தார்.
அந்தவேளையில் குழந்தை அழுது கொண்டே இருந்தது. உடனே குழந்தையை தூக்கிக்கொண்டு சிங்கர்உடையான் அங்கும், இங்குமாக பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் முன்பதிவு செய்துவிட்டு சண்முகபிரியா வந்து பார்த்தபோது கைப்பையை காணவில்லை. இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து இருவரும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். அப்போது ஒருவர் கைப்பையை எடுத்து சென்றதாக தெரிவித்தனர். இது குறித்து சண்முகபிரியா கொடைரோடு ரெயில் நிலைய அதிகாரியிடம் புகார் செய்தார். அவர், இதுபற்றி ரெயில்வே போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு துரைச்சாமி (51) அங்கு வந்தார். அவர் வாகன நிறுத்தம் பகுதியில் கைப்பை ஒன்று கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், கைப்பையை எடுத்து சோதனை செய்தனர்.
ஆனால் கைப்பையில் இருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை காணவில்லை. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மதுரை ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு மன்னர்மன்னன் கொடைரோடு ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
வாகன நிறுத்தம் பகுதியில் கைப்பை கிடப்பதாக கூறிய போலீஸ் ஏட்டு மீது அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் தொடர் விசாரணை நடத்தியபோது, கைப்பையை திருடியதாக ஏட்டு துரைச்சாமி ஒப்புக்கொண்டார். மேலும் அவர் பணத்தையும், ஏ.டி.எம். கார்டையும் பழ வியாபாரியான கொடைரோடு அருகில் உள்ள ஜெகதாபுரத்தை சேர்ந்த சதீஷ் (33) என்பவரிடம் கொடுத்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஏட்டு துரைச்சாமியையும், அவருக்கு உடந்தையாக இருந்த பழ வியாபாரி சதீசையும் கைது செய்தனர். அவரிடம் இருந்த பணமும், ஏ.டி.எம்.கார்டும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் நிலக்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய போலீஸ் ஏட்டுவே கைப்பையை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story