வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்கள் ஒன்றிய அலுவலகங்களில் நடக்கிறது


வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்கள் ஒன்றிய அலுவலகங்களில் நடக்கிறது
x
தினத்தந்தி 19 April 2018 4:26 AM IST (Updated: 19 April 2018 4:26 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்கள் ஒன்றிய அலுவலகங்களில் நடத்தப்படுகிறது.

கோவை,

வீட்டுமனைகளை வரன் முறைப்படுத்த ஒன்றிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதற்கு அடுத்த மாதம் 3-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தின் (எல்.பி.ஏ.) எல்லைக்குள் மாநகராட்சி பகுதிகள் மற்றும் சூலூர், சர்க்கார் சாமக்குளம், பெரியநாயக்கன்பாளையம், மதுக் கரை ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த பகுதிகளில் 31.10.2016-க்கு முன்பு அனுமதியற்ற வீட்டுமனைகளை வாங்கியவர்கள் அவற்றை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கான காலக்கெடு அடுத்த மாதம்(மே)3-ந் தேதி ஆகும்.

அதன்படி வீட்டுமனை வாங்கிய தனி நபர்கள் ஆன்லைனில் ரூ.500 செலுத்தி விண்ணப்பித்து அதனுடன் இணையதள பதிவு ஒப்புகை நகல், மனை உரிமையாளரின் புகைப்பட அடையாள சான்று, மனைப்பிரிவு வரைபடம் மற்றும் அதில் மனை குறித்த வரைபடம், விற்பனை ஆவணம், மனை கிரையம் பெற்ற தேதியில் இருந்து விண்ணப்ப நாள் வரையிலான வில்லங்க சான்று ஆகியவற்றை உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் கொடுத்தால், அவர்கள் அதை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி விடுவார்கள்.

உள்ளாட்சி அமைப்புகளில் அதற்கான வரன்முறை கட்டணம் மற்றும் அபிவிருத்தி கட்டணம் ஆகியவற்றை செலுத்தினால் அதற்கான சான்று தரப்படும். அதை எடுத்துச் சென்று சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் கொடுத்து தங்கள் வீட்டுமனைகளை பொதுமக்கள் வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்.

அதன்படி கோவை உள்ளூர் திட்டக்குழும எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தக் கோரி 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது தவிர மனை அபிவிருத்தியாளர்கள் (புரமோட்டர்கள்) தனியாக விண்ணப்பித்துள்ளனர். அதில் தனி நபர் விண்ணப்பித்த 10 ஆயிரம் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மீதி வீட்டுமனைகளையும் வரன்முறைப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளூர் திட்டக்குழுமத்தில் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்தி பரிந்துரை செய்தாலும் உள்ளாட்சி அமைப்புகளில் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் வாங்கிய வீட்டுமனைகளை உடனடியாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்காக கோவையை அடுத்த சூலூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட தனி நபர்கள் வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்துவதற்கான முகாம் வருகிற 23-ந் தேதி சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடக்கிறது. இதே போல சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 25-ந் தேதியும், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 26-ந் தேதியும், மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 27-ந் தேதியும் சிறப்பு முகாம் கள் நடத்தப்படுகிறது.

இதே போல கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனுமதியற்ற வீட்டுமனைகளை வரன்முறைப்படுத்த சிறப்பு முகாம்கள் நடத்தவும் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சிறப்பு முகாம்களுக்கு வருபவர்கள் உள்ளூர் திட்டக்குழுமத்திற்கு விண்ணப்பித்த இணையதள பதிவு ஒப்புகை நகல் கொண்டு வந்தால் அவர்களின் வீட்டுமனைகள் வரன்முறைப்படுத்தப்படும்.

அதற்கான வரன்முறை மற்றும் அபிவிருத்தி கட்டணம் செலுத்த வங்கி அதிகாரிகளும் முகாம்களில் கலந்து கொள்வார்கள். புறம்போக்கு, நத்தம் நிலங்களில் போடப்பட்ட வீட்டுமனைகள், திட்ட சாலைகளில் உள்ள வீட்டுமனைகள், உயர் அழுத்த மின்கம்பி செல்லும் பகுதியில் அமையப்பெற்ற வீட்டுமனைகள் ஆகியவை முகாம்களில் வரன்முறைப்படுத்தப்பட மாட்டாது. மற்றபடி தனி நபர் வாங்கிய அனைத்து வீட்டுமனைகளும் உடனடியாக வரன்முறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story