ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்கள் அவதி உடனே சீர்படுத்த கோரிக்கை


ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்கள் அவதி உடனே சீர்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 19 April 2018 5:00 AM IST (Updated: 19 April 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாட்டால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்துள்ளனர்.

கோவை,

கோவையில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.நிலைமையை உடனே சீர் படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேசம், குஜராத் உள்பட வடமாநிலங்களில் சந்தைகளில் பணப்புழக்கம் குறைந்து வருகிறது. இதனால் இந்த மாநிலங்களில் உள்ள பெரும்பாலான நகரங்களில் இருக்கும் ஏ.டி.எம். மையங்களில் பணம் இல்லாததால் எந்த நேரமும் காலியாக கிடக்கின்றன. சில ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பினாலும் 15 நிமிடங்களில் காலியாகி விடுகிறது.

இதுபோன்று தமிழகத்திலும் ஏ.டி.எம்.களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான ஏ.டி.எம்.கள் செயல்படாமலேயே இருக்கின்றன. சில ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டு உள்ளன.

கோவை மாநகர பகுதியில் 500-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏ.டி.எம்.களில் பணம் இல்லை. சில ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் கிடைத்தது. இதனால் அங்கு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை எடுத்துச்சென்றனர். அவற்றில் விரைவில் பணம் தீர்ந்து போனதால் பணம் எடுக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இது குறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது:-

கோவை மாநகர பகுதியில் பல இடங்களில் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. ஆனால் அங்கு சென்று பார்த்தால் பெரும்பாலான எந்திரங்களில் பழுதாகி இருக்கிறது என்றஅறிவிப்பு பலகையே காணப் படுகிறது. ஏ.டி.எம்.களில் பணம் வராததால், வங்கி கணக்கில் பணம் இருந்தும் அதை எடுத்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

பெரிய கடைகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் பொருட்கள் வாங்கினால் ஏ.டி.எம். கார்டை சுவைப் செய்து விடலாம். ஆனால் சிறிய அளவிலான மளிகை கடை, டீக்கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் பணம்தான் தேவைப்படுகிறது. அங்கு கார்டை சுவைப் செய்ய முடியாது.

ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக கடும் சிரமத்தை சந்தித்தோம். தற்போது பணப்புழக்கம் இல்லாததால் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம்.களை தேடி அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை சரிசெய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க சில மர்ம ஆசாமிகள் ஏ.டி.எம். எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்தி இருப்பதால் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணம் எடுக்கவும், வெளியிடங்களில் ஏ.டி.எம். கார்டுகளை சுவைப் செய்து பொருட்கள் வாங்கவும் பயமாக இருக்கிறது. எனவே இதுபோன்ற செயல்கள் ஏற்படாமல் தடுக்கவும், ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

வங்கிகளின் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ஏ.டி.எம். மையங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட வில்லை. அங்கு அந்தந்த வங்கிகள் சார்பில் பணம் வைக்கப்படுகிறது. ஆனால் பிற பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் வைக்க போதிய அளவுக்கு பணம் இல்லை. ரிசர்வ் வங்கியில் இருந்து புதிதாக ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படாததுதான் இதற்கு முக்கிய காரணம் ஆகும்.

பணத்தட்டுப்பாடு காரணமாக கூடுதல் பணம் கேட்டு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். ஓரிரு நாட்களில் கோவைக்கு பணம் வந்து விடும் என்பதால், இன்னும் ஒரு வாரத்துக்குள் சரியாகிவிடும் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story