நாட்டில் வன்முறையை தூண்டி கலவரத்தை உண்டாக்க பா.ஜனதாவினர் முயற்சி சித்தராமையா குற்றச்சாட்டு


நாட்டில் வன்முறையை தூண்டி கலவரத்தை உண்டாக்க பா.ஜனதாவினர் முயற்சி சித்தராமையா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 19 April 2018 5:21 AM IST (Updated: 19 April 2018 5:21 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் வன்முறையை தூண்டிவிட்டு, கலவரத்தை உண்டாக்க பா.ஜனதாவினர் முயற்சித்து வருவதாக முதல்-மந்திரி சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.

மைசூரு,

மைசூருவில் நேற்று மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து ஆகியவை சார்பில் பசவண்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மைசூரு அரண்மனை பின்புறத்தில் உள்ள பசவேஸ்வரா உருவச்சிலைக்கு மைசூரு புதிய கலெக்டர் தர்பன் ஜெயின், மாவட்ட முதன்மை செயல் அதிகாரி சிவசங்கர், மாநகராட்சி கமிஷனர் ஜெகதீஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறகு சோமசேகர் எம்.பி., ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ., வருணா தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயேந்திரா ஆகியோர் பசவேஸ்வரா உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா பசவண்ணர் என்று அழைக்கப்படும் பசவேஸ்வரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிராமணர் சமுதாயத்தில் பிறந்த பசவண்ணர் நாட்டில் சாதி பாகுபாடுகளை ஒழிப்பதற்காக பாடுபட்டார். நாட்டில் எல்லோரும் சமம், எல்லோருக்கும் சம உரிமைகள் உண்டு என்று போதித்தவர் பசவண்ணர். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும், தாயகம்தான் நமக்கு கைலாசம் என்று கூறி தமது கொள்கைகள் மூலமாக சமூகத்தில் சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார்.

சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க பாடுபட்ட பசவண்ணரின் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதில் பெருமை கொள்ள வேண்டும். நாட்டில் எல்லோருக்கும் பொருளாதாரம் நன்றாக இருக்க வேண்டும். சுதந்திரமாக செயல்பட வேண்டும். சம வாழ்க்கை, சம உரிமை கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டவர் பசவண்ணர்.

மத்திய மந்திரி அனந்த குமார் ஹெக்டேவின் கார் மீது லாரியை மோத விட்டு அவரை கொலை செய்ய நான்(சித்தராமையா) முயன்றதாக பிரதாப் சிம்ஹா டுவிட்டர் மூலம் குற்றம்சாட்டி உள்ளார். பா.ஜனதாவினர் எப்போதும் பொய்யான தகவல்களை பரப்புகிறவர்கள். பிரதாப் சிம்ஹா பற்றி பேசுவதற்கு ஒன்று இல்லை.

நாட்டில் வன்முறையை தூண்டிவிட்டு, கலவரத்தை உண்டாக்குவதற்காகவே பா.ஜனதாவினர் முயற்சித்து வருகிறார்கள்.

இவ்வாறு முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா தான் போட்டியிட உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு உட்பட்ட பிரிஹுண்டி, ஜெட்ஹுண்டி, குமாரபீடு, கோட்டேஹுண்டி, இலவாலா, பெலவாடி உள்பட 20 கிராமங்களுக்கு திறந்த பிரசார வாகனத்தில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

எல்லா கிராமத்திலும் மக்கள் முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு ஆரத்தி எடுத்து, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். முடிவில் இலவாலாவில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் சித்தராமையா கலந்து கொண்டு பேசினார்.


Next Story