கம்ப்யூட்டருக்கு ‘பேய் ஓட்டும்’ மந்திரவாதி


கம்ப்யூட்டருக்கு ‘பேய் ஓட்டும்’ மந்திரவாதி
x
தினத்தந்தி 20 April 2018 3:45 AM IST (Updated: 19 April 2018 12:41 PM IST)
t-max-icont-min-icon

‘கம்ப்யூட்டருக்கும், கெட்ட ஆவிக்கும் என்னய்யா சம்பந்தம்?’ என்று கேட்பவர்களுக்கு ஜோய் டாலியின் அனுபவங்கள் விடையளிக்கின்றன.

சான்பிரான்சிஸ்கோவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஏற்படும் எந்தவிதத் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கும், ஜோய் டாலியைத்தான் அங்குள்ள மக்கள் அழைக்கிறார்கள். அழைப்பு மணியில் இருந்து கம்ப்யூட்டர் வைரஸ் வரை எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை சரி செய்துவிடுகிறார் ஜோய். இவர் தொழில்நுட்ப வல்லுனர் அல்ல. மந்திரவாதி.

‘‘இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு பொருள் வேலை செய்யவில்லை என்றால், அது கெட்ட ஆவிகளின் வேலைதான். கெட்ட ஆவிகளைத் துரத்தி, மீண்டும் இயங்க வைக்கும் பணியைத்தான் நான் செய்து வருகிறேன்’’ என்கிறார் ஜோய்.

ஒருமுறை ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் கருவி பழுதாகிவிட்டதாம். தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து பார்த்தும் பழுது நீங்கவில்லை. யாரோ ஒருவர் ஜோயை அழைத்து வந்திருக்கிறார். எல்லோரும் ஏளனமாகப் பார்த்துக்கொண்டிருக்க, ஏதேதோ மந்திரங்கள் சொல்லி அதை செயல்படவைத்திருக்கிறார். அதுவரை நம்பாதவர்கள் கூட இந்த சம்பவத்திலிருந்து ஜோயை நம்ப ஆரம்பித்து விட்டனர்.

கம்ப்யூட்டர் வைரஸ், ஹேக்கர்ஸ் பிரச்சினைகளைக்கூட தீர்த்துவிடுகிறாராம், தொழில்நுட்பம் அறியாத ஜோய். இந்த நவீன காலத்தில் இவற்றை எல்லாம் நம்புகிறார்களே? என்று கவலைப்படுபவர்களுக்கு மத்தியில், ஜோய் மீது நம்பிக்கை வைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் ஹாரி பாட்டர் திரைப்படத்தில் வரும் மந்திரவாதி போல மேக்-அப் செய்துக்கொண்டு அசத்துகிறார், ஜோய் டாலி. 

Next Story