யானைகளின் விசித்திரமான உணவுப் பழக்கம்
இயற்கையாகவே கோடை காலத்தில் யானைகள் எலும்பு தெரியும்படி உடல் மெலிந்து காணப்படும்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திண்டுக்கல், கோவை, ஈரோடு, நெல்லை, விருதுநகர், தேனி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. கடந்த காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எல்லா காலத்திலும் மழைப்பொழிவு இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக அந்தநிலை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது வடகிழக்கு, தென் மேற்குப் பருவமழை மட்டுமே பெய்து வருகிறது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் மழை பெய்வதில்லை. இதனால் காடுகளில் வறட்சி தொடர்கிறது. அதனால், யானைகள் ஊருக்குள் புகுவது அதிகரித்துள்ளது. இந்தநிலையில் யானைகளில் பல தற்போது எலும்பும் தோலுமாக உடல் மெலிந்த நிலையில் பரிதாபமாக காணப்படுகின்றன. காடுகளுக்கு உள்ளே திரியும் யானைகளும் மெலிந்து காணப்படுகின்றன.
தற்போது நிலவும் அதிக வெப்பமான சூழல் யானைகளுக்கு ஒத்துப்போகவில்லை. அதனால் யானைகள் உடல் மெலிந்து காணப்படவில்லை. யானைகள் எத்தனை வறட்சி ஏற்பட்டாலும், அவற்றிற்கு உணவு இல்லாத சூழல் ஏற்படவே செய்யாது. அதன் வாழ்நாளில் எத்தனையோ வறட்சிகளை சந்தித்திருக்கும். அதற்கு தகுந்தாற்போல இடம் பெயரும் பகுதியையும், பருவத்துக்குத் தகுந்தபடி உணவுப் பழக்கத்தையும் மாற்றிக்கொள்ளும் திறன் படைத்தவை, யானைகள். வறட்சிக்கு தகுந்தபடி ஒரு தமிழக யானை சாதாரணமாக 600 முதல் 650 சதுர கி.மீ. தொலைவுவரை இடம்பெயரும். யானைகள் 80 சதவீதம் புற்களைத்தான் உட்கொள்ளும். புல்லின் வேர்ப்பகுதியில் மண் மண்டி காணப்படும். மண்ணோடு புல்லை சாப்பிட்டால் யானைகளின் பற்கள் தேய்மானம் அடையும்.
யானைகளுக்கு பல்தான் உயிர்நாடி. பல் போய்விட்டால், அதன் வாழ்நாள் முடிந்துவிடும். அதனால், யானைகள் மழை நேரத்தில் புல்லைப் பறித்து வேரை அப்புறப்படுத்திவிட்டு புல்லை மட்டும் சாப்பிடும். வெயில் காலத்தில் புற்கள் காய்ந்து சாப்பிடத் தகுதியான சத்தான உணவாக இருக்காது. அதனால், மேலே உள்ள புற்களை அப்புறப்படுத்தி விட்டு மண்ணையும் உதறிவிட்டு வேரை மட்டும் தனியாகப் பிரித்து சாப்பிடும். யானைகளுக்கு சத்துணவு முக்கியம். வெயில் காலத்தில் போதுமான உணவு கிடைக்காது. அப்போது மரப்பட்டை, இலைகளை சாப்பிட ஆரம்பிக்கும். இயற்கையாகவே கோடை காலத்தில் யானைகள் எலும்பு தெரியும்படி உடல் மெலிந்து காணப்படும். இது பெரும்பாலும் கோடை காலத்தில் ஏற்படக்கூடிய உடல் மாற்றம்தான்.
Related Tags :
Next Story